கோலாரில் ஒருவருக்கு அமைச்சர் பதவி
மாலூர்: “கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு எம்.எல்.ஏ.,களில் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும்,” என, மாலுார் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., நஞ்சேகவுடா வலியுறுத்தினார்.மாலுாரில் அவர் அளித்த பேட்டி:கர்நாடக மாநிலத்தில் டிசம்பர் மாதம் அமைச்சரவை விரிவாக்கம் உள்ளது. இதில் கோலார் மாவட்டத்தில் ஒருவருக்கு அமைச்சர் பதவி தருவதாக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், கட்சியின் மேலிடத் தலைவர்கள் உறுதி அளித்துள்ளனர்.எனவே, கோலார் மாவட்டத்தில் நான்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளோம். இதில் யாருக்காவது ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கினாலும் நாங்கள் ஏற்றுக் கொள்ள தயார். அமைச்சர் பதவிக்கு நானும் விருப்பம் தெரிவித்திருக்கிறேன்.மாலுார் தொகுதியில் தொடர்ந்து இரண்டு முறை எம்.எல்.ஏ., ஆகியுள்ளேன். லோக்சபா தேர்தலில், சட்டசபைத் தேர்தலின்போது நான் பெற்ற ஓட்டுகளை விட காங்கிரஸ் வேட்பாளருக்கு 24 ஆயிரம் ஓட்டுகள் அதிகமாக பெற்றுக் கொடுத்துள்ளேன். கட்சி மேலிடத்துக்கும் இது தெரியும்.'கோச்மல்' என்ற கோலார் பால் கூட்டுறவு சங்கத்தில் பால் உற்பத்தி அதிகரித்து வருகிறது. டில்லியில் விற்பனைக்கும் தரமான நந்தினி பால் அனுப்பப்படுகிறது. பால் விலை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தி, அதனை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.