உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய நர்சை காப்பாற்ற பணம் வெளியுறவு அமைச்சகம் மறுப்பு

இந்திய நர்சை காப்பாற்ற பணம் வெளியுறவு அமைச்சகம் மறுப்பு

புதுடில்லி: ஏமனில், துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட இந்திய நர்ஸ் நிமிஷா பிரியாவை காப்பாற்ற, அரசின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும்படி வெளியான தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது. கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த நர்ஸ் நிமிஷா பிரியா, 38, கடந்த 2008ல், மேற்காசிய நாடான ஏமனுக்கு வேலைக்காக சென்றார். அந்நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் இணைந்து, 'கிளினிக்' துவங்கினார். தொழில் போட்டியால், 2017ல், அவரை நிமிஷா பிரியா கொலை செய்தார். இந்த வழக்கில், அவருக்கு 2020ல் துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது.  கடந்த மாதம் 16ம் தேதி நிமிஷா பிரியாவுக்கு துாக்கு தண்டனை நிறைவேற்றப்படவிருந்த நிலையில், மத்திய அரசு மற்றும் கேரளாவைச் சேர்ந்த முஸ்லிம் தலைவர் காந்தாபுரம் அபுபக்கர் முஸ்லியார் மத்தியஸ்தத்தில் ஈடுபட்டதை அடுத்து, தண்டனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே, 'எக்ஸ்' சமூக வலைதளத்தில், டாக்டர் கே.ஏ.பால் என்பவரது கணக்கில், 'நிமிஷா பிரியாவை காப்பாற்ற அரசால் நிர்வகிக்கப்படும் வங்கிக் கணக்கில் பணம் செலுத்துங்கள். 'நமக்கு, 8.30 கோடி ரூபாய் தேவை' என, பதிவிடப்பட்டிருந்தது. 'நிமிஷா பிரியாவை காப்பாற்றுங்கள்' என்ற தலைப்பில் வெளியான அந்த பதிவில், அவரது புகைப்படமும், வங்கிக் கணக்கு விபரங்களும் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில், இந்த தகவலை வெளியுறவு அமைச்சகத்தின் உண்மை சரிபார்ப்பு குழு திட்டவட்டமாக மறுத்துள்ளது. 'நிமிஷா பிரியா தொடர்பாக பணம் கேட்டு வரும் தகவல்முற்றிலும் வதந்தி' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kannan Palanisamy
ஆக 20, 2025 11:14

கொலைகாரிக்கு சப்போட் பண்ண முடியாது.


nizam
ஆக 20, 2025 10:27

இந்த வழக்கு இந்திய அரசு ஆழ்ந்த ஈடுபாடு இல்லைஈரான் அரசின் அழுத்தத்தை கொடுத்து இருந்தால் இன்னிநிமிடம் நிமிஷா தாயகம் வந்திருப்பார் சுரேஷ் கோபீ சசி தருர் வேஸ்ட்


புதிய வீடியோ