மத்திய அமைச்சரை காணவில்லை போலீசில் புகார்
திருவனந்தபுரம்: மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியை காணவில்லை என கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவு சார்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.,வைச் சேர்ந்தவரும், மத்திய அமைச்சருமான நடிகர் சுரேஷ் கோபி, கேரள மாநிலம் திருச்சூர் லோக்சபா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரை கடந்த இரண்டு மாதங்களாக தொகுதியில் காணவில்லை என கேரள மாநில காங்.,கின் மாணவர் பிரிவான கேரள மாணவர் கூட்டமைப்பு சார்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
கடந்த இரண்டு மாதமாக சுரேஷ் கோபியை காணவில்லை. பொதுமக்களோ, பா.ஜ.,வினரோ கூட, தொகுதியில் எங்குமே அவரை பார்க்க வில்லை. மத்திய அரசு நிகழ்ச்சிக்காக, அமைச்சர் ராஜன் மற்றும் திருச்சூர் மேயர் ஆகியோர் சுரேஷ் கோபியை அழைக்க முயன்றனர். ஆனால், அவர்களால் கூட, அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தொகுதியில் நடைபெறும் ஏராளமான நிகழ்ச்சிகளில் சுரேஷ் கோபி பங்கேற்கவில்லை. தற்போது, போலீசில் புகார் அளித்திருப்பது, ஒரு அடையாள போராட்டம். அவர், தொகுதிக்கு வராவிட்டால், போராட்டம் தொடரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.