பயங்கரவாதத்திற்கு இடமில்லை நெதன்யாகுவிடம் மோடி பேச்சு
புதுடில்லி, மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை போக்கும் நோக்கில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் பேசிய நம் பிரதமர் நரேந்திர மோடி, 'நம் உலகில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை' என, எடுத்துரைத்தார்.மேற்காசிய நாடான இஸ்ரேல், அதன் அண்டை நாடான லெபனானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான தாக்குதல்களை தீவிரமாக்கியுள்ளது. இதன் உச்சகட்டமாக, 32 ஆண்டுகளாக ஹிஸ்புல்லாவின் தலைவராக இருந்த ஹசன் நஸ்ரல்லா, சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டார்.இது, ஹிஸ்புல்லா அமைப்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.இதைத் தொடர்ந்து, லெபனானில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் இருப்பிடங்களை குறிவைத்து, இஸ்ரேல் தன் தாக்குதலை தீவிரமாக்கியுள்ளது. இந்நிலையில், மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை போக்கும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் தொலைபேசி வாயிலாக நேற்று பேசினார்.இதுகுறித்து சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி கூறியதாவது:மேற்காசியாவில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் கலந்துரையாடினேன்.நம் உலகில், பயங்கரவாதத்திற்கு எப்போதும் இடமில்லை என்பதை எடுத்துரைத்தேன்; பிராந்தியங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை போக்கவும், பிணைக் கைதிகளை பாதுகாப்பாக விடுவிப்பதை உறுதி செய்யும்படியும் கேட்டுக்கொண்டேன்.மேற்காசியாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுக்கும் முயற்சிகளை ஆதரிப்பதில் இந்தியா உறுதி ஏற்றுள்ளது.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீடிக்கும் தாக்குதல்
லெபனானில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் இருப்பிடங்களை குறிவைத்து, இஸ்ரேல் ராணுவம் நேற்று முன்தினம் நடத்திய வான்வழி தாக்குதலில் மட்டும், 105 பேர் கொல்லப்பட்டனர். தங்கள் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதற்கு பழிதீர்க்கும் வகையில் இஸ்ரேலுக்கு எதிராக நீண்டகால போரை தொடுத்த ஹிஸ்புல்லா அமைப்பின் துணை தலைவர் நயீம் காசிம் சூளுரைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் பலியாகினர். லெபனானில், படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் பிரான்ஸ் அரசு, 12 டன் அளவிற்கான மருந்து பொருட்களை அனுப்பியுள்ளது.