மும்பை குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை உயர்வு
மும்பை : மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில், பலியானோர் எண்ணிக்கை, 23 ஆக உயர்ந்தது. கடந்த, 13ம் தேதி, மும்பை ஜாவேரி பஜார், ஓபேரா ஹவுஸ் உட்பட, மூன்று இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில், 20 பேர் உயிரிழந்தனர்; 129 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரும், மும்பையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஓபேரா ஹவுஸ் அருகே குண்டு வெடித்ததில், படுகாயங்களுடன், ஹர்கிஷன்தாஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஸ்ரீபால் முஜ்ஹாபூரா, 35, நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
அதேபோல், ஜாவேரி பஜார் குண்டு வெடிப்பில் படுகாயமடைந்து, ஜே.ஜே., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுரேந்தர் சிங், 30, மற்றும் அஜய் வர்மா, 30, ஆகிய இருவரும் நேற்று உயிரிழந்தனர். இதையடுத்து, மும்பை தொடர் குண்டு வெடிப்புச் சம்பவத்தில், பலியானோர் எண்ணிக்கை, 23 ஆக உயர்ந்தது. அதேசமயம், ஜே.ஜே., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, 22 நபர்களில் எட்டு பேரும், ஹர்கிஷன்தாஸ் மருத்துவமனையில் உள்ள, 12 பேரில், ஐந்து பேரும் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளனர் என, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.