உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  பஸ் மீது கார் மோதியதில் ஒன்பது பேர் பலி

 பஸ் மீது கார் மோதியதில் ஒன்பது பேர் பலி

யாத்கிர்:கோவிலுக்கு சென்று காரில் திரும்பும் போது, எதிரே வந்த தனியார் பஸ் மீது மோதியதில், ஒரே குடும்பத்தினர் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர். கர்நாடகாவின் யாத்கிர் மாவட்டம், சுரபுரா தாலுகாவின் தேவாபுரா கிராமம் அருகே, காலை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென அந்தக் காரின் டயர் வெடித்ததில், கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த தனியார் பஸ் மீது மோதியது. மோதிய வேகத்தில் இரண்டு வாகனங்களிலும் தீப்பிடித்தது. காரில் பயணித்த கிருஷ்ண நாயக், 55, அவரது மனைவி ஆனந்தகலா, 52, அவர்களின் மகள் நிசர்கா, 30, மருமகன் சரணப்பா, 36, இவரது மகன் சித்தார்த், 3, உறவினர்களான சசிகலா, 30, ஆத்விக், 5, சந்தனா, 8, ஒன்றரை வயது குழந்தை ஸ்ரீநிதி ஆகிய ஒன்பது பேர் உடல் கருகி உயிரிழந்தனர். ராய்ச்சூர் மாவட்டம், சிரவாராவை சேர்ந்த கிருஷ்ண நாயக், அரசியல் பிரமுகர். இவரது மகள் நிசர்கா, அரசு பணியில் இருக்கிறார். நேற்று அமாவாசை என்பதால், கிருஷ்ண நாயக் தன் குடும்பத்தினர் மற்றம் உறவினர்களுடன் திந்தனி மவுனேஸ்வரா, சுரபுராவின் வேணுகோபால சுவாமி கோவில்களுக்கு சென்றிருந்தார். தரிசனம் முடிந்து, நேற்று காலை 9:45 மணியளவில், யாத்கிர் வழியாக ராய்ச்சூருக்கு செல்லும் போது, விபத்து நிகந்துள்ளது. பஸ் தீப்பிடித்ததை கவனித்த ஓட்டுநர், உடனடியாக பஸ்சை நிறுத்தி, அதிலிருந்த, 20 பயணியரை கீழே இறக்கி விட்டதால், அவர்கள் உயிர் தப்பினர். சில பயணியர் லேசான காயம் அடைந்தனர். தகவலறிந்து அங்கு வந்த சுரபுரா போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர், அப்பகுதியினர் உதவியுடன் காரின் தீயை அணைத்து உடல்களை மீட்டனர். மூவர் சம்பவ இடத்திலும், மற்ற நால்வர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போதும், இருவர் சிகிச்சையின் போதும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் காரில் இருந்தவர்களில், சசிகலாவின் மகன் விராட் மட்டும் உயிர் தப்பியுள்ளார். சுரபுரா போலீஸ் நிலையத்தில், வழக்கு பதிவாகி விசாரணை நடக்கிறது. விசாரணை நடத்தப்படும் கிருஷ்ண நாயக், சிரவாரா பட்டண பஞ்சாயத்து கவுன்சிலர். இவர் தன் குடும்பத்தினர், உறவினர்களுடன் வேணுகோபால சுவாமி கோவிலுக்கு சென்று, தரிசனம் முடிந்து ஊருக்கு திரும்பும் போது, எதிரே வந்த பஸ் மீது மோதிக்கொண்டதால், சிறார்கள் உட்பட ஒன்பது பேர் பலியாகினர். பஸ்சில் இருந்த 20 பயணியர், பாதுகாப்பாக உள்ளனர். விபத்துக்கு என்ன காரணம் என்பது விசாரணை நடத்தப்படும். - பிருத்விக் சங்கர், எஸ்.பி., யாத்கிர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி