உள்ளூர் செய்திகள்

தடையில்லை!

புதுடில்லி: ‘குழந்தைகள், ‘இன்டர்நெட்’ பயன்படுத்த வயது அடிப்படையில் தடை விதிக்க முடியாது. இணையத்தை பயன்படுத்துவது குழந்தைகளின் அடிப்படை உரிமை. அதே சமயம், இணையவழி பாலியல் துன்புறுத்தல் தொடர்பான உள்ளடக்கங்களில் இருந்து அவர்களை பாதுகாக்க கடுமையான சட்ட கட்டமைப்புகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தேவை’ என, உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. உலகம் முழுதும் இணையவழி குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, சமூக ஊடகங்களை குழந்தைகளும் பயன்படுத்துவதால், பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால், இணைய பயன்பாட்டில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பு எப்படி என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. இதற்கு விடைகாணும் வகையில், ஆஸ்திரேலியா, கனடா, பிரேசில் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளில் சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தை பயன்படுத்த வயது அடிப்படையிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதே போல், நம் நாட்டிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. இதன் தொடர்ச்சியாக, குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, கே.வினோத் சந்திரன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் இணையத்தை பயன்படுத்தும் சுதந்திரம் இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானதாக கருத முடியாது. இணைய பயன்பாட்டை முழுதாக தடை செய்ய முடியாது. குழந்தைகளை பாதுகாக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள், அவர்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதாக அமைந்துவிடக் கூடாது. வயது அடிப்படையிலான கட்டுப்பாடுகள், குழந்தைகளை கட்டுப்பாடுகள் இல்லாத ஆபத்தான இணையதளங்களை நோக்கி தள்ளிவிடக் கூடும். இணையத்தில் பாலியல் துன்புறுத்தல் அல்லது மிரட்டல்களுக்கு ஆளாகும் குழந்தைகள், இணைய கட்டுப்பாட்டை மீறியதற்காக பெற்றோரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்ற அச்சத்தில், அதை மறைத்துவிடும் அபாயம் இருக்கிறது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல்கள், படங்கள், காணொளிகள் போன்ற உள்ளடக்கங்கள் தொடர்ந்து பரவி வருகின்றன. ஒழுங்குமுறை அமைப்புகளும், சமூகவலைதள நிறுவனங்களும் குழந்தைகளை பாதுகாக்கும் விஷயத்தில் போதிய தீவிரத்துடன் செயல்படவில்லை என்பதையே இணையத்தில் பரவும் உள்ளடக்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன. தற்போது ஒருவர் புகார் அளித்த பிறகே, இத்தகைய உள்ளடக்கங்களை நீக்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒரு சமூகவலைதளம் புகாருக்கு உள்ளான உள்ளடக்கத்தை நீக்கும் வேளையில், அதே உள்ளடக்கம் மற்ற தளங்களிலும் தானாக கண்டறியப்பட்டு நீக்கும் முறை நடைமுறையில் இல்லை. இதனால், அவற்றை இணையத்தில் இருந்து முழுதாக நீக்குவதில் தாமதம் ஏற்பட்டு, தொடர்ந்து பரவும் அபாயம் நிலவுகிறது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல்கள், துன்புறுத்தல்கள் அடங்கிய உள்ளடக்கங்களை விரைந்து கண்டறிந்து நீக்குவதற்கான, தேசிய தரவுதளங்களை உருவாக்க மத்திய அரசு வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும். இதில், ஒரே மாதிரியான உள்ளடக்கங்களை தொழில்நுட்ப ரீதியாக அடையாளம் காண உதவும், ‘ஹேஷ்’ குறியீடுகளும், அந்த உள்ளடக்கங்கள் இடம்பெறும் இணைய முகவரிகளும் இடம் பெற வேண்டும். இதன் மூலம் ஒரு தளத்தில் கண்டறியப்பட்ட ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கத்தை, மற்ற தளங்களிலும் அடையாளம் கண்டு நீக்க முடியும். அதே சமயம், ஒரேயொரு புகாரின் அடிப்படையில் எந்தவொரு உள்ளடக்கத்தையும் தானாக நீக்கவோ, தரவுதளத்தில் சேர்க்கவோ கூடாது. தவறான புகார்களால், முறையான உள்ளடக்கங்கள் நீக்கப்படுவதை தடுக்க, பலகட்ட சரிபார்ப்புகள் அவசியம். தவறுதலாக இணைய முகவரி அல்லது, ‘ஹேஷ்’ குறியீடு குறிக்கப்பட்டால், அதை எதிர்த்து முறையிடுவதற்கான குறைதீர் நடைமுறையும் உருவாக்கப்பட வேண்டும். குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் உள்ளடக்கங்களை கண்டறிய உருவாக்கப்படும் இந்த தரவுதளங்களை, வேறு வகையான உள்ளடக்கங்களை நீக்குவதற்கு பயன்படுத்தக் கூடாது. குழந்தைகளுக்கு இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை தொடக்க பள்ளி நிலையில் இருந்தே உருவாக்க வேண்டும். இணையத்தில் ஏற்படும் ஆபத்துகளை அடையாளம் காணவும், அச்சுறுதல்கள் ஏற்பட்டால், நம்பகமான பெரியவர்களிடம் அதை கொண்டு சென்று, உதவி கேட்பதற்கும் குழந்தைகளுக்கு கற்று தர வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், ‘இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டிச., 10க்குள் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்’ என, அறிவுறுத்தி, வழக்கை ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ