உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாம்ராஜ் நகரில் அக். 7 முதல் தசரா விழா முதன்முறை ஜம்பு சவாரி நடத்த திட்டம்

சாம்ராஜ் நகரில் அக். 7 முதல் தசரா விழா முதன்முறை ஜம்பு சவாரி நடத்த திட்டம்

சாம்ராஜ் நகர்: ''மைசூரு போன்று, சாம்ராஜ்நகருக்கும் கஜபடையை வரவழைத்து, ஜம்பு சவாரி ஊர்வலம் முதன் முறையாக நடத்தப்படும். முன்பு எப்போதும் இல்லாத வகையில், சாம்ராஜ்நகர் தசரா விழா, அக்., 7, 8, 9ம் தேதிகளில் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என, கால்நடை துறை அமைச்சர் வெங்கடேஷ் தெரிவித்தார்.சாம்ராஜ்நகரில் இம்முறை தசரா விழா கொண்டாடுவது தொடர்பாக, கால்நடைத் துறை அமைச்சரும், மாவட்ட பொறுப்புத் துறை அமைச்சருமான வெங்கடேஷ் தலைமையில், மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் நேற்று உயர்மட்ட ஆலோசனை நடந்தது.கூட்டத்துக்கு பின், அவர் கூறியதாவது:நாட்டுப்புற கலைகளின் தாயகம் சாம்ராஜ்நகர். இம்முறை தசரா விழாவில், 60 நாட்டுப்புறக் குழுக்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இளைஞர் தசராவுக்கு கூடுதல் முன்னுரிமை அளிக்கப்படும்.சாம்ராஜ்நகர் தனியார் தர்பார் நிகழ்ச்சி, 1980ல் நிறுத்தப்பட்டது. இம்முறை மீண்டும் தனியார் தர்பார் நிகழ்ச்சி நடத்தப்படும். விவசாயம், மகளிர் தசரா நிகழ்ச்சிகளும் கண்ணை கவரும் வகையில் இருக்கும்.குறிப்பாக, மைசூரு போன்று, சாம்ராஜ்நகருக்கும் கஜபடையை வரவழைத்து, முதன் முறையாக ஜம்பு சவாரி ஊர்வலம் நடத்தப்படும். புவனேஸ்வரி சதுக்கம் முதல் ராமசமுத்திரம் வரை, 15 லட்சம் ரூபாய் செலவில் மின் விளங்கு அலங்காரம் செய்யப்படும்.திரைப்பட நடிகர் சிவராஜ்குமார் உட்பட பல்வேறு திரை நட்சத்திரங்கள் கலை நிகழ்ச்சிகளுக்கு வர உள்ளனர். முன்பு எப்போதும் இல்லாத வகையில், சாம்ராஜ்நகர் தசரா விழா, அக்., 7, 8, 9ம் தேதிகளில் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை