பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறையில் இருந்து பூஜை பொருட்கள் மாயமானதாக திடீர் புகார்
திருவனந்தபுரம்: பத்மநாபசுவாமி கோவில் பாதாள அறைகளில் பாதுகாக்கப்பட்டு வந்த பூஜைப் பொருட்களில் பலவும் மாயமாகி விட்டன, சில பொருட்கள் சேதமடைந்துள்ளன என வழக்கறிஞர்கள் கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில், பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறைகளை திறந்து, அதிலுள்ள பொக்கிஷங்களை மதிப்பீடு செய்ய தேசிய அருங்காட்சியக துணைவேந்தர் ஆனந்தபோஸ் தலைமையில், பல்வேறு துறைகளின் வல்லுனர்கள் அடங்கிய ஐவர் குழுவை, சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ளது. இக்குழு, விரைவில் பாதாள அறைகளை திறந்து பொக்கிஷங்களை மதிப்பீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதை அடுத்து, திருவனந்தபுரம் சார்பு நீதிமன்றம், 2008ம் ஆண்டு நியமித்த வழக்கறிஞர்கள் கமிஷனை ரத்து செய்யக்கோரி, பத்மநாப சுவாமி கோவில் செயல் அலுவலர் இரு வாரங்களுக்கு முன்பு, சார்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், 2008ம் ஆண்டு கோர்ட் நியமித்த வழக்கறிஞர்கள் கமிஷன், பாதாள அறை பொக்கிஷங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இவ்வறிக்கையில், 'கோவிலில் நடைபெறும் அலப்சி உற்சவத்தின்போது, வழக்கமாக 130 பொருட்கள் பயன்படுத்தப்படும். இதில், தின பூஜைக்கான பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள பாதாள அறையில் இருந்தும், அடுத்துள்ள வியாசர்கோண் அறையில் இருந்தும் எடுக்கப்பட்ட தங்க குடம், தங்க குடை உட்பட பல பொருட்களில், சில பகுதிகள் மாயமாகி விட்டன. தங்க குடையில் பதிக்கப்பட்டிருந்த மரகதகற்களில் 14 கற்கள் சேதமடைந்திருந்தன. அதில் சுற்றப்பட்டிருந்த தங்க கயிறுகள் காணவில்லை. அதேபோல், தங்க குடையில் இருந்த 44 கொக்கிகளும் காணவில்லை. அதற்கு பதிலாக, செம்பு மற்றும் இரும்பு கொக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுபோல் மேலும் சில பொருட்கள் மாயமாகி உள்ளன. இவை அனைத்தும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்டவையாக இருக்கலாம்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.