இயற்கை விவசாயத்தில் ஒரு கோடி விவசாயிகள்
புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன் விபரம்:ஒரே நாடு - ஒரு சந்தா: கல்வி துறையில் வெளியான ஆய்வு கட்டுரைகள், இதழ்கள் அனைவருக்கும் கிடைக்கும் நோக்கோடு, ஒரே நாடு - ஒரே சந்தா திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, 6,300 கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த, 1.8 கோடி மாணவர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் பயனடைவர்.பான் நவீனமயம்: தற்போது நாடு முழுதும், 78 கோடி, பான் எனப்படும் வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. தற்போதுள்ள தொழில்நுட்பத்தை நவீனப்படுத்தும் வகையில் பான் 2.0 திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அடல் புதுமை திட்டம் நீட்டிப்பு: புதுமை கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டது அடல் புதுமை திட்டம் இயக்கம். தற்போது உலக புதுமை பட்டியலில் இந்தியா, 39வது இடத்தில் உள்ளது. வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் நோக்கோடு, அடல் புதுமை திட்டத்தை, 2,750 கோடி ரூபாய் செலவில், 2028ம் ஆண்டு வரை நீடிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இயற்கை விவசாயம் இயக்கம்: இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் தேசிய இயக்கத்தை துவக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக, 2,481 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு கோடி விவசாயிகளை, இயற்கை விவசாயத்துக்கு மாற்றுவது இந்த இயக்கத்தின் நோக்கம்.