ஆன் - லைன் வகுப்புகள் தனியார் பள்ளிகளில் துவக்கம்
புதுடில்லி:போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், மாணவர்களின் பாதுகாப்பை கருதி, டில்லியில் பல தனியார் பள்ளிகள் நேற்று முதல் 'ஆன் - லைன்' வாயிலாக வகுப்புகள் நடத்துகின்றன.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 26 சுற்றுலாப் பயணியரை சுட்டுக் கொன்றனர்.அதற்கு பதிலடி கொடுத்த நம் ராணுவம், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது. இதில், 70க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.இதையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.எல்லையில் அமைந்துள்ள பஞ்சாப் மாநிலத்தில் ஏற்கனவே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தலைநகர் டில்லியிலும் பல தனியார் பள்ளிகள், ஆன் - லைன் வயிலாக வகுப்புகள் நடத்த துவங்கியுள்ளன.வசந்த் குஞ்ச் டில்லி பப்ளிக் பள்ளி, பக்ஸிம் விஹார் இந்திரபிரஸ்தா சர்வதேச பள்ளி, மாடல் டவுன் குயின் மேரி பள்ளி ஆகியவை உட்பட பல பள்ளிகளில் நேற்று முதல் ஆன் - லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன.இந்திரபிரஸ்தா சர்வதேச பள்ளி முதல்வர் ஷிகா அரோரா, “மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரும் 19ம் தேதி கோடை விடுமுறை துவங்குகிறது,”என்றார்.வசந்த் குஞ்ச் டில்லி பப்ளிக் பள்ளி முதல்வர் தீப்தி வோஹ்ரா, “முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வகுப்புகளை ஆன் - லைனில் நடத்துகிறோம்,”என்றார்.குயின் மேரி பள்ளி முதல்வர் அனுபமா சிங், “மாணவர் வருகை குறைவாக இருக்கிறது.போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், பல பெற்ற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. எனவே, ஆன் - லைன் வகுப்புகளை துவக்கி விட்டோம்,”என்றாஅர்.துவாரகா ஐ.டி.எல்., சர்வதேச பள்ளி முதல்வர் சுதா ஆச்சார்யா கூறியதாவது:போர்க்கால ஒத்திகைக்குப் பின், மாணவ - மாணவியரின் பாதுகாப்பு குறித்து ஆலோசித்தோம். ஏராளமான பெற்றோர் கூறிய ஆலோசனையை ஏற்று ஆன் - லைன் வாயிலாக வகுப்புகள் நடத்துகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.அதேநேரத்தில், பள்ளிகளை மூட கல்வி இயக்குனரகம் இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.