உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆப்பரேஷன் சிந்தூர் தவிர்க்க முடியாத ஒன்று: ராணுவ டிஜிஎம்ஓ திட்டவட்டம்

ஆப்பரேஷன் சிந்தூர் தவிர்க்க முடியாத ஒன்று: ராணுவ டிஜிஎம்ஓ திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' பஹல்காம் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா எடுத்த 'ஆப்பரேஷன் சிந்தூர்' தவிர்க்க முடியாத ஒன்று. அதற்கு முன்னதாக எதிரிகளை தடுக்கும் வகையில் எல்லையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது,'' என டில்லியில் நடந்த ஐ நா சபை மாநாட்டில் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்(டிஜிஎம்ஓ) லெப்டினன்ட் ஜெனரல் ராஜிவ் கய் கூறியுள்ளார்.ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி சுற்றுலா வந்த பயணிகள் 26 பேரை, பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் அவர்களின் மதத்தைக் கேட்டு சுட்டுக் கொன்றனர். இதனையடுத்து 'ஆப்பரேஷன் சிந்தூர்' நடவடிக்கையைத் துவக்கிய இந்திய ஆயுதப்படைகள், பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களைத் தாக்கி அழித்தன. பாகிஸ்தானின் விமானப்படைத் தளங்களும் அழிக்கப்பட்டன. இதனையடுத்து இந்த நடவடிக்கையை நிறுத்துமாறு, பாகிஸ்தான் கெஞ்சியது. இதனையடுத்து அந்த நடவடிக்கையை இந்தியா நிறுத்தி வைத்தது. இந்நிலையில் டில்லியில் நடந்த ஐக்கிய நாடுகளுக்குப் படைகளைப் பங்களிக்கும் நாடுகளின் ராணுவ அதிகாரிகள் மாநாட்டில் இந்திய ராணுவத்தின் டிஜிஎம்ஓ ராஜிவ் கய் பங்கேற்று பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:

அப்பாவி மக்கள் உயிரிழப்பு

1980 களில் தான் ஜம்மு காஷ்மீரில் பிரச்னை ஆரம்பித்தது. அது முதல் தற்போது வரை 28 ஆயிரம் பயங்கரவாத சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. 1990 முதல் அம்மாநிலத்தில் சிறுபான்மையினராக உள்ள ஒரு லட்சம் மக்கள் வெளியேறினர். 60 ஆயிரம் குடும்பங்கள் இடம் பெயர்ந்தன. 15 ஆயிரம் அப்பாவி மக்கள் மற்றும் 3 ஆயிரம் பாதுகாப்பு பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளனர். இதற்கான உத்தரவு எங்கிருந்து வருகிறது என்பது தெளிவாக தெரியும்.

கட்டாயம்

ஆப்பரேஷன் சிந்தூர் ஒரே நாள் இரவில் நடக்கவில்லை. 2001 ல் நமது பார்லிமெண்ட் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து நமது படைகள் எல்லையில் குவிக்கப்பட்டன. அங்கு ஓராண்டு காலம் வீரர்கள் இருந்தனர். 2016 ல் நமது பாதுகாப்பு ப டை வீரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். நமது முகாம்கள் தீவைத்து வைக்கப்பட்டன. இதனையடுத்து நாம் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டோம். இதனால், மீண்டும் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதி அருகில் இருந்து நடவடிக்கை மேற்கொண்டோம். 2019 ல் நாம் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் துல்லியமான தாக்குதல் நடத்தினோம். ஆனால், தற்போது, அதனை தாண்டிச் சென்றோம். அதற்கு நடந்த நிகழ்வுகளின் தீவிரம் மற்றும் அளவு தான் காரணம். ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. எல்லை தாண்டி ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள், ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா வந்த 26 பேரை, மதத்தைக் கேட்டு, அவர்களின் குடும்பத்தினர் முன்பு சுட்டுக் கொன்றனர். இதனை உடனடியாக அவர்கள் கொண்டாடினர். முதலில் காஷ்மீர் ரெசிஸ்டன்ஸ் முன்னணி என்ற பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்றது. ஆனால், நிலைமை கைமீறி போய் விட்டதை உணர்ந்ததும் அந்த பயங்கரவாத அமைப்பு பின்வாங்கியது.

இலக்குகள்

ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை தவிர்க்க முடியாதது என்பதை அனைவரும் உணர்ந்தனர். ஆனால், நாங்கள் எங்கள் நேரத்தை எடுத்துக் கொண்டோம். ஆயுதப்படைகள் நடவடிக்கை எடுப்பதற்கு ராணுவ தளபதி அனுமதி அளித்தார். எங்களது இலக்குகளை நாங்கள் முன்னிலைப்படுத்தினோம். எதிரிகளை தடுக்க எல்லையில் முன்னெச்சரிக்கையாக படைகள் நிறுத்தப்பட்டன. அரசின் துறைகள் ஒன்றுக்கு ஒன்று தாங்களாகவே ஒருங்கிணைந்தன. தாக்குதல் நடத்த வேண்டிய இடங்கள் அனைத்தும் தேர்வு செய்யப்பட்டன. அவை ஒவ்வொன்றாக ஆய்வு செய்யப்பட்டு, அதிலிருந்து இறுதிப்பட்டியல் தயாரிக்கப்பட்டது. அந்த இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Rajendra Kumar
அக் 15, 2025 02:49

நம் பாரத நாட்டின் ஆப்பரேசன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை உலகிற்கே எடுத்துக்காட்டாக விளங்கியது. பாரத பிரதமரின் வழிகாட்டலில் ராணுவம் நவீன மயமாக்கப் பட்டு, சுதந்திரமாக செயல்பட்டு பாகிஸ்தானை நான்கு நாட்களில் பிரித்து மேய்ந்து கதற விட்டது.


Senthoora
அக் 15, 2025 05:46

சரி, சரி எதனை நாளுக்கு இதையே சொல்லுவீங்க, அடுத்த வேலைய பாருங்க, சிந்தூர் ஆபரேஷனுக்கு போன முதலாவது பெண் போர்விமானி இப்போ எங்கே என்று சொல்லமுடியுமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை