உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பூலோகமா... இல்லை சொர்க்கலோகமா!

பூலோகமா... இல்லை சொர்க்கலோகமா!

மைசூரு: நறுமணத்தை பரப்பியபடி, வண்ணமயமாக காட்சி அளிக்கும் மைசூரின் மலர் கண்காட்சி, மக்களை கவர்ந்திழுக்கிறது. பூக்களால் உருவான கலை சிற்பங்கள் மனதை குஷிப்படுத்துகின்றன.தசரா திருவிழாவை ஒட்டி, தோட்டக்கலைத்துறை மற்றும் மாவட்ட பஞ்சாயத்து சார்பில், மைசூரின் குப்பண்ணா பூங்காவில் மலர் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலர் கண்காட்சி மிக அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளது.பல்வேறு நிறங்களின் ரோஜா, சாமந்தி, மல்லிகை, பியூபல் ஆர்கிட், கோல்கட்டா ஹைப்ரிட், ப்ளூ டெஸ்சி, ஜிப்ரி, ஜிஞ்சர் லில்லி உட்பட லட்சக்கணக்கான பூக்கள் இடம் பெற்றுள்ளன.கண்ணாடி மாளிகையில் ஜனநாயகம், அரசியல் சாசனம் வளர்ந்து வந்த பாதையை பூக்களால் விவரித்துள்ளனர். அனுபவ மண்டபம், அதிநவீன பார்லிமென்ட், மைசூரு சமஸ்தானத்தில் மக்கள் பிரதிநிதிகள் கூட்டம் நடப்பதை, பூக்களால் காண்பித்துள்ளனர்.கர்நாடக அரசின் வாக்குறுதித் திட்டங்களை விளக்கும் கலை வடிவம், குதிரை வண்டியில் செல்லும் சுற்றுலா பயணியர், கடிகாரம், வீணை என பூக்களால் உருவாக்கி உள்ளனர். விவசாயிகள், ராணுவ வீரர்களை பிரதிபலிக்கும் கலை உருவங்களும் இங்குள்ளன.சிவப்பு மிளகாய் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட புறா; இந்தியாவின் முதல் ஆசிரியை சாவித்ரி பாய் புலே, பள்ளியில் சிறார்களுக்கு பாடம் நடத்தும் காட்சியை, சிறு தானியங்களால் உருவாக்கப்பட்டுள்ளது.செல்பி பிரியர்களுக்காக, 'ஐ லவ் யூ மைசூரு' என பூக்களால் எழுதப்பட்ட செல்பி பாயின்ட் அமைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி ரோஜாப்பூக்களால் அமைக்கப்பட்ட இதயம், அரண்மனை உருவங்களையும் காணலாம்.மலர் கண்காட்சி நடக்கும் குப்பண்ணா பூங்காவை, ஒரு முறை சுற்றி வந்தால் சமுதாயத்துக்கு பெரும் பங்களிப்பு அளித்த நபர்கள், சாதனையாளர்கள், படைப்பாளர்களின் பூக்களால் தயாரான உருவங்கள் தென்படுகின்றன. மஞ்சள், சிவப்பு நிற ரோஜாக்களால் அமைக்கப்பட்ட கர்நாடக வரைபடம், இதன் இடது, வலது புறத்தில் யானைகளின் உருவங்கள் உள்ளன.இம்முறை 'டி 20' உலகக்கோப்பையை வென்ற இந்தியாவுக்கு, பாராட்டு தெரிவிக்கும் நோக்கில், பூக்களால் உலகக்கோப்பையும் உருவாக்கப்பட்டுள்ளன. நால்வடி கிருஷ்ண ராஜ உடையார் காலத்தில், மைசூரு மாநிலத்தில் அமைக்கப்பட்ட பத்ராவதி தொழிற்சாலை, சிவசமுத்ரா நீர் மின் உற்பத்தி திட்டம், மைசூரு பல்கலைக்கழகம், மைசூரு ஆகாச வாணி என, பல விஷயங்களை பூக்களால் காண்பித்துள்ளனர்.மலர் கண்காட்சியை காணும்போது, சொர்க்க லோகமே தரை இறங்கியதை போன்று உணர்வை ஏற்படுத்துகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ