அரசியலமைப்பு குறித்த சர்ச்சை கருத்து அமைச்சரிடம் மேலும் விசாரிக்க உத்தரவு
கொச்சி : அரசியலமைப்பு குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த கேரள மீன்வளத்துறை அமைச்சர் சஜி செரியனிடம் குற்றப்பிரிவு பிரிவு போலீசார் விசாரணை நடத்த கேரள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ.,வை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. சர்ச்சைக்குரிய கருத்து
இங்கு மீன்வளத்துறை அமைச்சராக உள்ள சஜி செரியன், கடந்த 2022 ஜூலை 3ல் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், நம் அரசியலைமைப்பு சட்டம், தொழிலாளர்களை சுரண்டுவதை அனுமதிப்பதாக சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அமைச்சரின் பேச்சை நிருபிக்க போதிய ஆதாரம் இல்லை கூறி விசாரணை அதிகாரியின் அறிக்கையை தாக்கல் செய்தனர். இந்நிலையில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த அமைச்சர் செரியனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்கட்சியினர் வலியுறுத்தினர். இதையடுத்து செரியன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அறிக்கை தாக்கல்
மேலும் அரசியலைமைப்பை அவமதித்தது குறித்து திருவல்லா ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சஜி செரியனை விடுவித்து போலீசார் அறிக்கை தாக்கல் செய்தனர்.இதையடுத்து, மீண்டும் அவர் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அமைச்சரிடம் மேலும் விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி சி.பி.ஐ., தாக்கல் செய்த மனுவை நேற்று கேரள உயர்நீதிமன்றம் விசாரித்தது.அப்போது அமைச்சர் குற்றமற்றவர் என போலீசார் அளித்த அறிக்கையை ரத்து செய்த உயர்நீதிமன்றம், குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.இந்நிலையில் அமைச்சர் பதவி விலக வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இதை ஏற்க மறுத்த அமைச்சர் செரியன், உயர்நீதிமன்றம் எனது தரப்பு வாதத்தை கேட்காததால் இந்த உத்தரவு தொடர்பாக மேல்முறையீடு செய்வேன். எனது பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் என தெரிவித்துஉள்ளார்.