செப்.14ல் இந்தியா-பாக். அணிகள் மோதல்: பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவர் தந்தை எதிர்ப்பு
கான்பூர்: ஆசிய கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும ஆட்டத்திற்கு பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவரின் தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 2025ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுகு இடையே நடந்து வரும் இத்தொடரில், மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன.இதில் அனைவரின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அளவில், இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில்(குரூப் A) இடம் பெற்றுள்ளன. விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த கிரிக்கெட் தொடரில் இந்தியாவும், பாகிஸ்தானும் செப்.14ம் தேதி மோதுகின்றன.நிச்சயம் அனல் பறக்கும் என்று போட்டியை ஆவலுடன் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஆனால், போட்டியை நடத்தக் கூடாது, பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக்கூடாது என்று பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவரின் தந்தை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஏப்.22ம் தேதி பஹல்காமில் பாக். ஆதரவு பயங்கரவாத இயக்கங்கள் நடத்திய தாக்குதலில் மொத்தம் 26 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவரான சுப்ஹம் த்வேதி என்பவரின் தந்தை சஞ்சய் த்வேதி இந்தியா,பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை எதிர்த்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது; ஏப்.22ம் தேதி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஏதும் அறியாத 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தானுடனான எந்த உறவும் இல்லை என்று இந்தியா கூறியது. ரத்தமும், தண்ணீரும் ஒன்றாக பாயாது என்றும் அறிவித்தது.ஆனால், இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி செப்.14ம் தேதி நடக்கிறது என்பது, என்னை போன்ற பலருக்கு அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக இருக்கிறது. நான் மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாடே இதை எதிர்க்கிறது.அரசியலிலும், விளையாட்டிலும் பாகிஸ்தானுடன் உறவே இருக்கக்கூடாது என்று இந்தியா கூறுகிறது. இந்த போட்டியை நான் எதிர்க்கிறேன். மக்களின் உணர்வுகளை மனதில் வைத்துக் கொண்டு, இவ்விஷயத்தில் உரிய நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு சஞ்சய் த்வேதி கூறினார்.