புதுடில்லி: 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது, பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வி அடைந்ததாக ராணுவ துணைத் தலைவர் ராகுல் ஆர்.சிங் கூறியதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவிய நிலையில், 'அந்த தகவல் முற்றிலும் வதந்தி' என, பி.ஐ.பி., எனப்படும் பத்திரிகை தகவல் பணியகம் தெரிவித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7ல், 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில், பாகிஸ்தானில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்களை நம் ராணுவத்தினர் அழித்தனர். டில்லியில் கடந்த வாரம் இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை கூட்டமைப்பு மாநாடு நடந்தது. இதில் பங்கேற்ற நம் ராணுவ துணைத் தலைவர் ராகுல் ஆர்.சிங், 'ஆப்பரேஷன் சிந்துார்' குறித்து பேசினார்.அப்போது, 'சீனாவின் ஆயுதங்களை பாக்., ராணுவம் பயன்படுத்தி வருகிறது. அந்நாட்டில் உள்ள 81 சதவீத ஆயுதங்கள், சீனாவில் இருந்து வாங்கப்பட்டவை. 'தன் ஆயுதங்களை, பாக்., வாயிலாக சீனா சோதித்து பார்க்கிறது' என்றார். ஆனால் இந்த செய்தி, சமூக வலைதளங்களில் வேறு மாதிரியாக பரவியது. 'ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையின் போது, பாகிஸ்தானின் மின்னணு போர் மற்றும் சீனாவின் உளவுத்துறை திறன் எங்களை உண்மையிலேயே ஆச்சரியப்படுத்தியது. 'இந்தியாவை வீழ்த்தியதில் சீனாவின் தொழில்நுட்பம் பெரும் பங்கு வகித்தது' என, ராணுவ துணைத் தலைவர் ராகுல் ஆர்.சிங் கூறியதாக, பாக்., ஆதரவு சமூக வலைதள கணக்குகளில் செய்தி பரவியது. ராகுல் ஆர்.சிங் புகைப்படத்துடன் இதை, 'பிரேக்கிங் செய்தி'யாகவும் சிலர் பகிர்ந்திருந்தனர்.இந்நிலையில், இது தொடர்பாக நேற்று விளக்கம் அளித்த பத்திரிகை தகவல் பணியகத்தின் உண்மை சரிபார்ப்பு குழு, 'பாக்., ஆதரவு கணக்குகளில் வேண்டுமென்றே தவறான பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.'பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றதாக ராணுவ துணைத் தலைவர் ராகுல் ஆர்.சிங் ஒருபோதும் கூறவில்லை. அந்த செய்தி முற்றிலும் வதந்தி' என தெரிவித்துள்ளது.