உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகளை பாக்., சந்திக்கும்

தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகளை பாக்., சந்திக்கும்

புதுடில்லி : ''எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்காக பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, நிலைமையை தீவிரப்படுத்தும் நோக்கம் இல்லை. அதே சமயம், பாகிஸ்தான் தாக்குதலில் ஈடுபட்டால் கடும் விளைவுகளை சந்திக்கும்,'' என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று கூறினார்.பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியுள்ள சமயத்தில், மேற்கு ஆசிய நாடான ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி நேற்று டில்லி வந்தார். இது முன்னரே திட்டமிடப்பட்ட பயணம். அவரை, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று சந்தித்து பேசினார். அவரிடம் பஹல்காம் தாக்குதல், அதில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் பங்கு ஆகியவை குறித்து விவரித்தார். மேலும், அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மிகவும் மோசமானது. இதனால், எங்களுக்கு கடந்த 7ம் தேதி எல்லை தாண்டிய பயங்கரவாத முகாம்களை தாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எங்கள் பதிலடி இலக்கு வைத்து, அளவோடு இருந்தது.நிலைமையை மேலும் மோசமாக்குவது எங்கள் நோக்கமல்ல. இருப்பினும், எங்களுக்கு எதிராக ராணுவத் தாக்குதல்கள் நடந்தால், அவற்றுக்கு மிகவும் மோசமான விளைவை பாகிஸ்தான் எதிர்கொள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.ஈரான் அண்டை நாடாகவும், நெருங்கிய நட்பு நாடாகவும் உள்ளதால், இந்த சூழல் குறித்து நல்ல புரிதல் இருப்பது முக்கியம்.இவ்வாறு அவர் பேசினார்.

சவுதி வெளியுறவு இணை அமைச்சர் இந்தியாவுக்கு திடீர் வருகை

சவுதி அரேபியாவின் வெளியுறவு இணை அமைச்சர் அடெல் அல்ஜுபைர், முன்னறிவிப்பு இல்லாத பயணமாக இந்தியாவுக்கு நேற்று வந்தார்; நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் பேச்சு நடத்தினார். இந்த சந்திப்பில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றங்களை குறைப்பது குறித்து அமைச்சர் அடெல் விவாதித்துள்ளார்.இது குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்ட அறிக்கையில், 'சவுதி அரேபியாவின் வெளியுறவு இணை அமைச்சர் அடெல் அல்ஜுபைருடன் நல்லதொரு சந்திப்பு நடந்தது. பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் இந்தியாவின் உறுதியான கண்ணோட்டங்களை அவருக்கு விவரித்தேன்' என குறிப்பிட்டிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை