மேலும் செய்திகள்
கேரளாவில் ரயில் மோதி தமிழர்கள் 4 பேர் உயிரிழப்பு
02-Nov-2024
பாலக்காடு: கேரளாவில், பாலக்காடு அருகே ரயில் மோதி, நான்கு தமிழர்கள் உயிரிழந்த விவகாரத்தில், அங்கு துாய்மை பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரரின் ஒப்பந்தம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. தமிழகத்தின் சேலத்தைச் சேர்ந்த இரு பெண்கள் உட்பட நான்கு பேர், கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தின் சொரனுார் ரயில் நிலையம் அருகே, பாரதப்புழா ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில், நேற்று முன்தினம் துாய்மைப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, திருவனந்தபுரம் நோக்கி சென்ற கேரள எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில், நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், ஒருவரது உடலை தேடும் பணி முழு வீச்சில் நடக்கிறது. ரயில்வே நிர்வாகம் சார்பில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக, ரயில்வே நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:மலப்புரத்தைச் சேர்ந்த முனவ்வர் என்பவருக்கு, சொரனுார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் துாய்மைப் பணி மேற்கொள்ள ஒப்பந்தம் வழங்கப்பட்டது.இதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த 10 தொழிலாளர்கள், பாரதப்புழா ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில் நேற்று முன்தினம் பணியில் ஈடுபட்டனர். வேலை முடிந்ததும், சாலையை பயன்படுத்துவதற்கு பதில், ரயில்வே அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் அனுமதியின்றி ரயில் பாலத்தை கடந்து, சொரனுார் ரயில் நிலையத்திற்கு செல்ல தொழிலாளர்கள் முயன்றனர். அப்போது, கேரள எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில், இரு பெண்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.இந்த விவகாரத்தில், முனவ்வருக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது.மேலும், தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதற்காக, அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
02-Nov-2024