வாசகர்கள் கருத்துகள் ( 1 )
என் தாய் அவள் ??❤️
பெங்களூரின் பணக்கார கோவில்களில், பனசங்கரி கோவிலும் ஒன்றாகும். பக்தர்களை காந்தம் போன்று தன் வசம் ஈர்க்கும் அற்புதமான கோவில். இங்கு வெளிமாநிலங்கள், நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.பெங்களூரில் அமைந்துள்ள பனசங்கரி கோவில், முக்கியமான ஹிந்து கோவில்களில் ஒன்றாகும். சிவனின் துணைவியான பார்வதிக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இங்கு குடிகொண்ட அம்பாளை, 'ஷாகாம்பரி' என்றும் அழைக்கின்றனர். வரலாற்று பிரசித்தி பெற்றது. இப்பகுதி முழுமையாக பனசங்கரி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இக்கோவில் ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த 1915க்கு முன், கோவில் கட்டப்பட்டது. அம்பாளின் தீவிர பக்தரான சோமண்ணா ஷெட்டி, பனசங்கரி கோவிலை கட்டியதாக கூறப்படுகிறது. பொதுவாக ராகு காலத்தில் கடவுள்களை வணங்க மாட்டார்கள். பூஜை செய்யமாட்டார்கள். ஆனால் பனசங்கரி கோவிலில் ராகு காலத்தில் அம்பாளை பூஜிக்கின்றனர். இங்கு நடக்கும் ராகு கால பூஜை மிகவும் சிறப்பானது.அந்த நேரத்தில் அம்பாளுக்கு அதிகமான சக்தி இருக்கும். அப்போது அவரை எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி வழிபட்டால், துன்பம் விலகும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கூடும். குழந்தை இல்லாத தம்பதிக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதே காரணத்தால் ராகு காலத்தில், ஆயிரக்கணக்கான பெண்கள் பனசங்கரிக்கு எலுமிச்சை பழத்தில் நெய் விளக்கேற்றுகின்றனர். திராவிட பாணியில், வாஸ்து முறைப்படி கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவிலில் தினமும் காலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடக்கும்.செவ்வாய் கிழமை மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை, வெள்ளி கிழமைகளில் காலை 10:30 மணி முதல், மதியம் 12:00 மணி வரை, ஞாயிற்று கிழமைகளில் மாலை 4:30 மணி முதல், மாலை 6:00 மணி வரை பூஜைகள், கைங்கர்யங்கள் நடக்கின்றன.அனைத்து நாட்களிலும் கோவில் திறந்திருக்கும். செப்டம்பர் 13ம் தேதி பனசங்கரியின் பிறந்த நாளாக கருதப்படுகிறது. அன்றைய தினம் சிறப்பு பூஜைகள் நடக்கும். டிசம்பர் இறுதியிலோ அல்லது ஜனவரி முதல் வாரத்திலோ, கோவிலின் ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் திருவிழா நடத்தப்படும். தசராவும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படும். ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைக்கிறது. கர்நாடகாவின் பணக்கார கோவில்களில் இதுவும் ஒன்றாகும். தங்களின் பிரார்த்தனை நிறைவேறியதும் வெள்ளி, தங்கத்தை பக்தர்கள் காணிக்கை செலுத்துகின்றனர். எப்படி செல்வது?
பெங்களூரின், கனகபுரா பிரதான சாலையின், சர்பன்டபாளையாவில் பனசங்கரி கோவில் உள்ளது. அனைத்து நகரங்களில் இருந்தும், பெங்களூருக்கு வாகன வசதிகள் உள்ளன. கோவிலுக்கு செல்ல அரசு பஸ், தனியார் வாகன வசதி ஏராளம். வாடகைக்கார், ஆட்டோக்களும் உள்ளன. தற்போது மெட்ரோ ரயில்களும் இயக்கப்படுகின்றன. காலை 8:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை கோவில் திறந்திருக்கும். கோவிலை பற்றி கூடுதல் தகவல் வேண்டுவோர் 080 - 2671 4989 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் - நமது நிருபர் -.
என் தாய் அவள் ??❤️