உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரயிலில் இடம் கிடைக்காததால் கற்களை வீசி தாக்கிய பயணியர்

ரயிலில் இடம் கிடைக்காததால் கற்களை வீசி தாக்கிய பயணியர்

சத்தர்பூர் மத்திய பிரதேசத்தில் இருந்து, மஹா கும்பமேளா நடக்கும் உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜுக்கு செல்ல திட்டமிட்டிருந்த பயணியர், ரயில் பெட்டியின் கதவுகள் உள்பக்கம் பூட்டப்பட்டிருந்ததால், ஆத்திரமடைந்து ரயில்கள் மீது கற்களை வீசினர். உ.பி.,யின் பிரயாக்ராஜில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்தில், கடந்த 13ல் துவங்கிய மஹா கும்பமேளா நிகழ்ச்சி, பிப்., 26ல் நிறைவடைகிறது. இதில் பங்கேற்க, பிரயாக்ராஜ் செல்வதற்காக, ம.பி.,யின் சித்தாபூர் மாவட்டத்தில் உள்ள சித்தாபூர், ஹர்பால்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் பயணியர் நேற்று முன்தினம் இரவு காத்திருந்தனர்.அப்போது, பிரயாக்ராஜ் செல்லும் இரு ரயில்கள், நிலையங்களை வந்தடைந்தன. ரயில்களில், ஏற்கனவே கடும் கூட்டநெரிசல் இருந்ததால், பெட்டியின் கதவுகளை உள்ளே இருந்த பயணியர் திறக்கவில்லை. ஒருசில பெட்டிகளின் கதவுகள் திறக்கப்பட்டாலும், ரயிலில் ஏற முடியாமல் காத்திருந்த பயணியர் தவித்தனர். இதனால் அதிருப்தி அடைந்த அவர்கள், அந்த ரயில்கள் மீது கற்களை வீசி தாக்கினர். இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதுகுறித்து, ஜான்சி ரயில்வே பிரிவின் மக்கள் தொடர்பு அதிகாரி மனோஜ் குமார் சிங் கூறுகையில், “சத்தாபூர், ஹர்பால்பூர் ரயில் நிலையங்களில் நடந்த சம்பவங்கள், எங்கள் கவனத்துக்கு வந்துள்ளன. ''எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காதபடி நடவடிக்கை எடுக்கப்படும். பிரயாக்ராஜுக்கு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன. தேவைக்கேற்ப சிறப்பு ரயில்களும் இயக்கப்படும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை