கல்லுாரி மாணவி கொலை வழக்கில் அமைதி போராட்டம் நடத்த அனுமதி
பெங்களூரு : பெல்தங்கடியில் கல்லுாரி மாணவி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், அமைதியான முறையில் போராட்டம் நடத்த, உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.தட்சிண கன்னடாவின் பெல்தங்கடியை சேர்ந்த கல்லுாரி மாணவி, கடந்த 2012ம் ஆண்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ., சந்தோஷ் ராவ் என்பவரை கைது செய்தது. ஆனால், அவர் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால், 2023ம் ஆண்டு அவரை நீதிமன்றம் விடுவித்தது.மாணவி கொலை வழக்கில், மீண்டும் விசாரணை நடத்த கோரி பல அமைப்புகள் போராட்டம் நடத்த முன்வந்தன. ஆனால் போராட்டங்கள் நடத்த அரசு தடை விதித்து இருந்தது. இந்நிலையில், மாணவியின் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க அரசு உத்தரவிட கோரி, கடந்த 14ம் தேதி பெல்தங்கடி அருகே கடபாவில் போராட்டம் நடத்த, உள்ளூர் மக்கள் அதிகார அமைப்பு முடிவு செய்தது. இதற்காக கடபா தாசில்தாரிடம் அனுமதி கேட்டு கடிதமும் அளித்தனர். முதலில் போராட்டத்திற்கு அனுமதி அளித்த தாசில்தார், பின், அனுமதியை திரும்ப பெற்றார். நசுக்க முடியாது
இதையடுத்து, போராட்டம் நடத்த அனுமதி வழங்கும்படி, உயர் நீதிமன்றத்தில், உள்ளூர் மக்கள் அதிகார அமைப்பு சார்பில் மனு செய்யப்பட்டது. இதுபோல கர்நாடக தொழிலாளர் மன்றம் என்ற அமைப்பும், பெங்களூரு சுதந்திர பூங்காவில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு செய்தது. இரண்டு மனுக்களையும், நீதிபதி நாகபிரசன்னா விசாரித்தார்.நேற்று நடந்த விசாரணையில், மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் வேலன் வாதிடுகையில், ''தடை உத்தரவு மூலம் போராட்டம் நடத்தும் உரிமையை, மாநில அரசால் நசுக்க முடியாது. வழக்கில் பிரபல நபர் ஒருவருக்காக வாதிடும் வக்கீல், போராட்டம் நடத்த எதிர்ப்பு தெரிவித்ததால், தாசில்தார் அனுமதியை திரும்ப பெற்று உள்ளார். அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கலாம். ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்க, போலீஸ் துறைக்கு அனுமதி உள்ளது,'' என்றார். அரசு உத்தரவு
அரசு வக்கீல் முகமது ஜாபர் வாதிடுகையில், ''இந்த வழக்கில் பிரபல கோவிலின் நிர்வாக அதிகாரி பெயரை தவறாக பயன்படுத்துகின்றனர். அவர் பற்றி அவதுாறு அறிக்கை வெளியிட கூடாது என்று அரசு உத்தரவிட்டு உள்ளது. போராட்டத்தின் போது அரசு உத்தரவை மீறினால் நடவடிக்கை எடுக்க, போலீசாருக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும்,'' என்றார்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நாகபிரசன்னா, ''மனுதாரர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தலாம். இதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், அரசு உத்தரவை மீற கூடாது,'' என, உத்தரவிட்டார்.