விமான விபத்து 198 உடல்கள் ஒப்படைப்பு
ஆமதாபாத் : குஜராத்தின் ஆமதாபாத் விமான நிலையம் அருகே, 'ஏர் இந்தியா' விமானம் கடந்த 12ம் தேதி விழுந்து நொறுங்கியதில், விமானத்தில் இருந்த ஒருவர் தவிர, 241 பேர் உயிரிழந்தனர்.விமானம் விழுந்த பி.ஜே., மருத்துவக் கல்லுாரி விடுதியில், 29 பேர் உயிரிழந்தனர். விமானம் தீப்பிடித்து எரிந்ததால், பலியான உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவியது. இதனால், டி.என்.ஏ., எனப்படும் மரபணு சோதனை வாயிலாக உடல்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன. நேற்று காலை வரை ஆமதாபாத் சிவில் மருத்துவமனையில் நடத்தப்பட்ட சோதனையில், 215 உடல்கள் அடையாளம் காணப்பட்டன. இவற்றில் 198 உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் ராகேஷ் ஜோஷி கூறுகையில், ''ஒப்படைக்கப்பட்ட, 198 உடல்களில் 149 பேர் இந்தியர்கள், 32 பிரிட்டிஷார், ஏழு போர்த்துக்கீசியர்கள், ஒருவர் கனடாவை சேர்ந்தவர். மேலும், விடுதி வளாகத்தில் இறந்த ஒன்பது பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன,'' என்றார்.