| ADDED : ஜூன் 25, 2026 08:53 AM
ஆமதாபாத்: ஆமதாபாத் விமான நிலையத்தில் ஒரே ஓடுபாதையில் இரு விமானங்கள் நேருக்கு நேர் வந்ததால் பயணிகள் பெரும் பீதிக்குள்ளாகினர்.நேற்று இரவு 164 பயணிகளுடன் ஆமதாபாத் விமான நிலையம் வந்த ஏர் இந்தியா விமானம், அதற்கான நிறுத்துமிடத்திற்கு சென்று கொண்டிருந்தது. அதே நேரத்தில், இண்டிகோ விமானம் புறப்படுவதற்காக ஓடுதளப் பாதையில் திடீரென வந்ததால், இரு விமானங்களும் நேருக்கு நேர் சந்தித்தன. இதனால் பயணிகள் பீதிக்குள்ளாகினர்.இதனைத் தொடர்ந்து, ஏர் இந்தியா விமானம் அங்கிருந்து பாதுகாப்பாக மாற்று இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்தச் சம்பவத்தால் இண்டிகோ விமானம் புறப்படுவதில் 20 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது.இதுகுறித்து இண்டிகோ நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியதாவது; ஆமதாபாத் - மும்பை இடையேயான விமானம், புறப்படுவதற்காக ஓடுதளப் பாதையில் சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு விமான நிறுவனத்தின் விமானம் எதிர்பாராதவிதமாக எங்கள் விமானத்தின் பாதையில் வந்தது. இதனால், எங்கள் விமானம் புறப்படுவதற்கு சிறிது நேரம் தாமதமானது. பின்னர் அந்த விமானம் மாற்றுப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து, எங்களது விமானம் புறப்பட்டு மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, என்று அவர் கூறினார்.