உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிளஸ் 1, பிளஸ் 2 அரசியல் அறிவியல் பாட புத்தக குழு மாற்றம்

பிளஸ் 1, பிளஸ் 2 அரசியல் அறிவியல் பாட புத்தக குழு மாற்றம்

புதுடில்லி: பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரசியல் அறிவியல் பாடப் புத்தகங்களை தயாரிக்கும் குழுவை என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் மாற்றியமைத்துள்ளது. என்.சி.இ.ஆர்.டி., பாடப்புத்தகங்கள் சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பின்பற்றப்படுகிறது. பாடப் புத்தகங்களை காலத்துக்கு ஏற்ப மாற்றி அமைப்பதற்காக, அவ்வப்போது பாடப் புத்தக மேம்பாட்டுக் குழுக்களை என்.சி.இ.ஆர்.டி., அமைத்து வருகிறது. இந்நிலையில், பிளஸ் 1, பிளஸ் 2 அரசியல் அறிவியல் பாடப் புத்தகங்களை புதிதாக தயாரிப்பதற்கான குழுவை தற்போது மறுசீரமைத்துள்ளனர்.  பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரசியல் அறிவியல் பாடப் புத்தகங்கள், மாணவர்களுக்கு அரசியலமைப்பு, ஆட்சி முறை, அரசியல் கோட்பாடுகள் உள்ளிட்டவற்றை கற்பிக்கும் வகையில் உள்ளன. இந்த குழுவுக்கு கர்நாடகாவின் நிட்டே பல்கலை துணைவேந்தர் சாண்டீப் சாஸ்திரி தலைமை வகிக்கிறார். பிளஸ் 1 பாட புத்தகத்தை நவம்பருக்குள் தயாரிக்கவும், பிளஸ் 2 பாட புத்தகத்தை அடுத்த ஆண்டு ஜூலைக்குள் தயாரிக்கவும் குழுவுக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் உறுப்பினர்களாக உள்ள நால்வர் ஆர்.எஸ்.எஸ்., அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவர்களில் யதுநாத் தேஷ்பாண்டே என்பவர் ஆர்.எஸ்.எஸ்., மாணவர் அமைப்பான  ஏ.பி.வி.பி.,யில் மஹாராஷ்டிரா மாநில இணை அமைப்பு செயலராக உள்ளார். பிரசாந்த் திவேகர், ஆர்.எஸ்.எஸ்., தொடர்புடைய ஞான பிரபோதினி அமைப்பை சேர்ந்தவர். பேராசிரியர் வந்தனா மிஸ்ரா, ஏ.பி.வி.பி.,யின் முன்னாள் தேசிய செயலர். ரவி ராமச்சந்திர சுக்லா, ஆர்.எஸ்.எஸ்., தொடர்புடைய பிரபோதினி வெளியிடும் இதழின் ஆசிரியர் குழுவில் இருந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !