கிரிமினல் வழக்கு பதிய போலீசாருக்கு... உத்தரவு! சபரிமலை வழக்கில் ஐகோர்ட் அதிரடி
கொச்சி : கேரளாவில், சபரிமலை அய்யப்பன் கோவிலில் துவார பாலகர்கள் சிலைகளுக்கு அணிவிக்கப்பட்ட தங்கக் கவசத்தில் எடை குறைந்த விவகாரம் குறித்து, கிரிமினல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த போலீசாருக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவில், மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவில் கருவறையின் வாசலில், இரு புறமும் உள்ள துவார பாலகர்கள் சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்கக் கவசங்கள், 2019ல் கழற்றப்பட்டு செப்பனிடும் பணிக்காக, தமிழகத்தின் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மாயம்
செப்பனிடும் பணிக்கான செலவை, கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி ஏற்றார். சென்னையில் அவருக்கு சொந்தமான, 'ஸ்மார்ட் கிரியேஷன்ஸ்' என்ற நிறுவனத்தில் செப்பனிடும் பணி நடந்தது. இதற்காக, திருவிதாங்கூர் தேவசம் போர்டு தங்கக் கவசங்களை ஒப்படைத்த போது, எடை 42.8 கிலோவாக இருந்தது. செப்பனிடும் பணி முடிந்து, ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறுவனம் மீண்டும் ஒப்படைத்த போது, தங்கக் கவசத்தின் எடை, 38 கிலோவாக குறைந்திருந்தது. அதாவது தங்க முலாம் பூசப்பட்ட கவசத்தில், 4.54 கிலோ அளவுக்கு தங்கம் மாயமாகி இருந்தது. இந்த விவகாரம் கேரள அரசியலில் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது. மேலும், பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை, கேரள உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்றைய விசாரணையின் போது, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:
விசாரணை
இதுவரை நடந்த விசாரணையில், தங்கம் மாயமானது உறுதியாகி உள்ளது. தங்கம் கொள்ளை அடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதால், அது தொடர்பாக கிரிமினல் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும். ஆறு வாரங்களுக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை எந்த அளவில் உள்ளது என்பது குறித்த அறிக்கையை, இரண்டு வாரங்களுக்குள் ஒரு முறை சமர்ப்பிக்க வேண்டும். விசாரணை முடியும் வரை இதன் விபரங்கள் பொது மக்களுக்கோ அல்லது ஊடகங்களுக்கோ வெளியிட கூடாது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. சபரிமலையில் தங்கம் மாயமான விவகாரத்தில் அரசியல் சதி இருக்கிறது. இந்த விவகாரத்தில், திருவிதாங்கூர் தேவசம் போர்டு மீது எந்த தவறும் இல்லை. ஆனால், வேறு பலருக்கு தொடர்பு இருக்கிறது. இதில் சம்பந்தப்பட்டோர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது. பினராயி விஜயன் கேரள முதல்வர், மார்க்சிஸ்ட்