பி.எஸ்.என்.எல்., 4ஜி சேவை: பிரதமர் மோடி துவக்கி வைப்பு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புவனேஸ்வர்: முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின், '4ஜி' நெட்வொர்க் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார். ஒடிஷாவில், முதல்வர் மோகன் சரண் மஜி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஜார்சுகுடா மாவட்டத்திற்கு நேற்று வந்த பிரதமர் மோடி, பெர்ஹாம்பூர் - குஜராத்தின் சூரத்தில் உள்ள உத்னா இடையேயான 'அமிர்த பாரத்' எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், ஜார்சுகுடாவில் தொலை தொடர்பு, ரயில்வே, சுகாதாரம், உயர்கல்வி உள்ளிட்ட துறைகளில், 60,000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, பொதுத் துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல்., எனப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனத்தின், '4ஜி' நெட்வொர்க் சேவையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இனி, நாடு முழுதும் பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களுக்கு, '4ஜி' சேவை கிடைக்கும். மேலும், நாடு முழுதும், 37,000 கோடி ரூபாய் செலவில், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள, 97,500 '4ஜி' மொபைல் நெட்வொர்க் கோபுரங்களையும் அவர் திறந்து வைத்தார். இந்த கோபுரங்கள் அனைத்தும், முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சூரிய சக்தி மூலம் இயங்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம், உள்நாட்டிலேயே தொலை தொடர்பு சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபடும் நாடுகள் பட்டியலில், ஐந்தாவது இடத்தை நம் நாடு பிடித்துள்ளது. முதல் நான்கு இடங்களில் டென்மார்க், ஸ்வீடன், தென் கொரியா, சீனா ஆகியவை உள்ளன. நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: பல ஆண்டுகளாக ஒடிஷா வறுமையை கண்டுள்ளது. ஆனால் தற்போது, செழிப்புக்கான பாதையில் உள்ளது. எங்களின் இரட்டை இன்ஜின் அரசு, ஒடிஷாவையும், அதன் மக்களையும் வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல உறுதிபூண்டுள்ளது. வரவிருக்கும் ஆண்டுகள் ஒடிஷாவுக்கு மிகவும் முக்கியமானது. ஒடிஷாவில் விரைவில் செமி கண்டக்டர் பூங்கா அமைக்கப்படும். பெர்ஹாம்பூர் - உத்னா இடையேயான அமிர்த பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், குஜராத்தில் உள்ள ஒடிஷா மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பி.எஸ்.என்.எல்., நிறுவனம், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, '4ஜி' நெட்வொர்க் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம், அதிவேக இன்டர்நெட் பெறாத பகுதிகள், கிராமங்கள் பயனடையும். எல்லையில் உள்ள நம் வீரர்களும் பாதுகாப்பான மற்றும் அதிவேகமான, '4ஜி' சேவையை இனி பயன்படுத்த முடியும். பி.எஸ்.என்.எல்., மூலம், உலகளாவிய தொலை தொடர்பு உற்பத்தி மையமாக நம் நாடு மாறி உள்ளது. இது தவிர, நாட்டின் பல்வேறு பகுதிகளில், ஐ.ஐ.டி.,களின் விரிவாக்கமும் துவங்கி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். விரைவில் '5ஜி' உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தொலை தொடர்பு சேவையை வழங்கி, நம் நாடு சாதனை படைத்துள்ளது. சேவை மற்றும் நுகர்வோர் நாடாக இருந்த நாம், உற்பத்தி, புதுமை, தொழில்முனைவு மற்றும் ஏற்றுமதி மையமாக தற்போது மாறியுள்ளோம். 'தற்சார்பு இந்தியா' என்ற இலக்கை நோக்கி நம் நாடு முன்னேறி வருவதற்கான அடையாளம் இது. பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின், '4ஜி' சேவை விரைவில், '5ஜி' ஆக மேம்படுத்தப்படும். ஜோதிராதித்ய சிந்தியா மத்திய தகவல் தொடர்பு அமைச்சர், பா.ஜ.,