உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கால்நடை மருத்துவர் தேர்வில் முறைகேடு ஐ.ஏ.எஸ்., அதிகாரி வீட்டில் ஈ.டி., ரெய்டு

கால்நடை மருத்துவர் தேர்வில் முறைகேடு ஐ.ஏ.எஸ்., அதிகாரி வீட்டில் ஈ.டி., ரெய்டு

பெங்களூரு: கால்நடை மருத்துவர்கள் தேர்வு முறைகேடு வழக்கில், கர்நாடக ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஞானேந்திர குமார் வீட்டில், ஈ.டி., எனப்படும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். கர்நாடகாவில் முதல்வர் சிவகுமார் தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. கே.பி.எஸ்.சி., எனும் கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையம், கடந்த ஜனவரியில் 400 கால்நடை மருத்துவர்களை தேர்வு செய்வதற்கான தேர்வை நடத்தியது. இதில் பங்கேற்ற தேர்வர்களை இடைத்தரகர்கள் அணுகி, வேலை பெற்று தர 70 லட்சம் முதல் 80 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கேட்டுள்ளனர். இதற்காக முன்பணமாக, 40 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக, கே.பி.எஸ்.சி., முன்னாள் தலைவர் சிவசங்கரப்பா சாகுகர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்தது பற்றி தகவல் கிடைத்ததால், அமலாக்கத் துறையும் விசாரிக்கிறது. கடந்த வாரம் சிவசங்கரப்பாவின் வீடுகள், கே.பி.எஸ்.சி., அலுவலகம் உட்பட 21 இடங்களில் ஈ.டி., சோதனை நடந்தது. தேர்வு நடந்தபோது, கே.பி.எஸ்.சி.,யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஞானேந்திர குமார் கங்குவாரின் பெங்களூரு வீட்டில் சோதனை நடத்த நேற்று மதியம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர். அப்போது, ஞானேந்திர குமார் வீட்டில் இல்லை; அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. அங்கிருந்த காவலாளி, தன்னிடம் சாவி இல்லை என கூறியதால், 'டூப்ளிகேட்' சாவி செய்யும் நபரை அதிகாரிகள் வரவழைத்தனர். பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவரை சாட்சியாக வைத்து, அவர் முன் கதவை திறந்தனர். இதை வீடியோவும் எடுத்து கொண்டனர். பின், வீட்டிற்குள் சென்று சோதனை நடத்தினர். சோதனை இரவு வரை நீடித்தது. வீட்டில் இருந்து அதிகாரிகள் என்னென்ன கைப்பற்றி எடுத்து சென்றனர் என்ற தகவல்கள் இல்லை. ஞானேந்திர குமார் தற்போது கர்நாடக சிறு, நடுத்தர தொழில்கள் துறை இயக்குனராக உள்ளார். அவர் திடீரென மாயமாகி விட்டதாக செய்திகள் வெளியாகி, நேற்று முன்தினம் பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால், அவர் தன் தந்தையை பார்க்க உ.பி., சென்றிருப்பதாக, மாநில உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே விளக்கம் அளித்திருந்த நிலையில், ஞானேந்திர குமார் வீட்டில் நேற்று சோதனை நடத்தப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை, தன் வீட்டில் சோதனை நடத்த வரும் என்பதை முன்கூட்டியே அறிந்து, அவர் தப்பி சென்றதாகவும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை