மொராக்கோவில் இந்திய ராணுவ தளவாட ஆலை உற்பத்தியை துவக்கி வைத்தார் ராஜ்நாத் சிங்
புதுடில்லி; வட ஆப்ரிக்கா நாடான மொராக்கோவுக்கு நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், இரண்டு நாள் அரசுமுறை பயணமாக சென்றுள்ளார். அங்கு, 'டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட்' சார்பில், பெர்ரெசிட் என்ற இடத்தில் ராணுவ கவச வாகன உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டுள்ளது. அதன் உற்பத்தியை நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், மொராக்கோ ராணுவ அமைச்சர் அப்தெல் லத்தீப் லவுடியும் இணைந்து துவக்கி வைத்தனர். ஆப்ரிக்க கண்டத்தில், இந்திய ராணுவத்துக்காக 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் முதல் முறையாக இந்த ஆலை அமைக்கப்பட்டுள்ளது. தவிர இது தான் மொராக்கோவின் மிகப் பெரிய ஆலை. மொராக்கோ அரசுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், 'டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ்' நிறுவனம், ராணுவ கவச வாகனத்தை உற்பத்தி செய்யும். முதல் கட்ட வாகனங்கள் டெலிவரி அடுத்த மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆலை அமைப்பதற்கான திட்டங்கள் முன்கூட்டியே முடிந்ததால், மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே இந்த ஆலை இயங்க தொடங்கி விட்டது. இதனால், உற்பத்தியும் துவங்கியுள்ளது. 'ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கூட்டமைப்புடன், நவீன ரக ராணுவ கவச வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவின் தனியார் நிறுவனத்திற்கும் இருக்கிறது என்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது. மேலும், ஒரு இந்திய தனியார் நிறுவனம் ராணுவ தளவாட உற்பத்திக்காக வெளிநாட்டில் ஆலை அமைத்திருப்பது இதுவே முதல் முறை' என, டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆலையில் உற்பத்தியை துவக்கி வைத்த பின் நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: தற்சார்பு என்ற இந்தியாவின் தொலைநோக்கு பார்வை, உள்நாட்டு தேவைகளை மட்டும் பூர்த்தி செய்வது அல்ல, மாறாக உயர்தரமான நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்ட உறுதியான பொருட்களை தயாரித்து, உலக நாடுகளுக்கும் வழங்குவது தான். 'மேக் இன் இந்தியா' திட்டத்துடன் 'மேக் வித் பிரெண்ட்ஸ்' என்ற கொள்கையையும் இந்தியா வகுத்துள்ளது. அதற்கு மொராக்கோவில் துவங்கப்பட்ட இந்த ஆலையே சிறந்த உதாரணம். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.