கூடைப்பந்து விளையாட்டில் அசத்தும் மாற்றுத்திறனாளி ரத்னம்மா
நல்ல உடல்வாகு கொண்ட மனிதர்களை விட மாற்று திறனாளிகளுக்கு வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற லட்சிய தாகம் இருக்கும். உடல் ஊனம் சாதனைக்கு ஒரு தடையில்லை. சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற பழமொழிக்கு ஏற்ப மாற்று திறனாளிகள் செயல்படுவர். இவர்களில் ஒருவரான கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனையை பற்றி பார்க்கலாம்.ராம்நகரின் கனகபுரா தாலுகா ஹாரோஹள்ளி அருகே கரிகால் தொட்டி கிராமத்தில் வசிப்பவர் கெம்பையா; விவசாயி. இவரது நான்காவது மகள் ரத்னம்மா, 33. மாற்று திறனாளியான இவர், மாநில சக்கர நாற்காலி கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனை ஆவார். விளையாட்டில் தொடர்ந்து பல சாதனைகள் படைத்து வருகிறார்.இதுகுறித்து ரத்னம்மா கூறியதாவது: பிறக்கும்போது நான், நன்றாக இருந்தேன். 5 வயதில் போலியோ நோயால் பாதிக்கப்பட்டு இரு கால்களின் கட்டுப்பாட்டை முற்றிலும் இழந்தேன். பெற்றோர், என்னை பல மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தாலும், கால்கள் சரியாகவில்லை.ஆனாலும் கஷ்டப்பட்டு பத்தாம் வகுப்பு வரை படித்தேன். வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதனால், விளையாட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். சக்கர நாற்காலி கூடைப்பந்து விளையாட்டு போட்டி என்னை வெகுவாக கவர்ந்தது.இதனால் பெங்களூரு சென்று, அங்கு ஒரு விளையாட்டு அகாடமியில் பயிற்சி பெற்றேன். பின், மாநில அளவிலான சக்கர நாற்காலி கூடைப்பந்து விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டேன். அதில் சிறப்பாக செயல்பட்டதால் தேசிய அளவில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.சமீபத்தில் மத்திய பிரதேச மாநிலம், குவாலியரில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கங்கள் வென்றேன்.பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக விளையாடி பதக்கம் வெல்ல வேண்டும் என்பது எனது வாழ்க்கையின் குறிக்கோள். அந்த இலக்கை அடைய தொடர்ந்து என்னை தயார்படுத்தி வருகிறேன்.பிழைப்புக்காக மளிகை கடை நடத்துகிறேன். குடும்ப உறுப்பினர்களும் எனக்கு உறுதுணையாக உள்ளனர். கர்நாடக அரசு, மாநில மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, விளையாட்டு சங்கங்கள் ஏதாவது எனக்கு உதவி செய்தால் நன்றாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார் - - நமது நிருபர் --.