மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் ரிஷி சுனக் சந்திப்பு
புதுடில்லி: மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் சந்தித்து பேசினார். முன்னதாக. மத்திய அமைச்சர் ஜேபி நட்டாவையும் அவர் சந்தித்தார். பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மர் அண்மையில் இந்திய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். இந்த நிலையில், பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசியுள்ளார். இவரது பதவி காலத்தில் இந்தியா - பிரிட்டன் இடையே நெருக்கமான உறவு நீடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. ரிஷி சுனக்குடனான சந்திப்பு குறித்து மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில்,'ரிஷி சுனக்குடனான சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது,' என்றார். அதேபோல, பிரதமர் மோடியின் தலைமையில் தொழில்நுட்பம் மூலம் அடிப்படை சுகாதார சேவைகள் எவ்வாறு மேம்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து ரிஷி சுனக்கிடம் எடுத்துக் கூறியதாக பாஜ தேசிய தலைவரும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.