உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தம்பதி வாழ்க்கையை மாற்றிய ரோஜா

தம்பதி வாழ்க்கையை மாற்றிய ரோஜா

தன்னை நம்பி பிழைக்கும் மக்களை, இந்த மண் எப்போதும் கை விட்டதில்லை. இதற்கு பல உதாரணங்களை கூறலாம். தோட்டத்தில் பூக்கள் வளர்க்கும் தொழில், சாப்ட்வேர் பொறியாளர்களின் வாழ்க்கையை மாற்றி அமைத்தது; பணத்தை அள்ளி தருகிறது.சமீப ஆண்டுகளாக விவசாயத்தில் ஈடுபாடு குறைகிறது. வானிலை மாற்றங்கள், நியாயமான விலை கிடைக்காதது, வன விலங்குகளின் தொந்தரவு, வரவை விட செலவு அதிகரிப்பது உட்பட பல்வேறு காரணங்களால் விவசாயத்தில் ஈடுபட ஆர்வம் காட்டுவதில்லை. விவசாய நிலத்தை விறகனை செய்து விட்டு வேறு தொழில் செய்வோர் அதிகம்.லாபம் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் விவசாயத்தை கைவிடாத மக்களும் உள்ளனர். குறிப்பாக புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, விவசாயம் செய்கின்றனர். லட்சக்கணக்கான ரூபாய் கிடைக்கும் வேலையை விட்டு விட்டு, விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். இந்த வகையில் பவன்குமார், பிரதிபா தம்பதியும் மற்றவருக்கு எடுத்துக்காட்டாக உள்ளனர்.

மென் பொறியாளர்கள்

கோலாரை சேர்ந்த பவன்குமார், முதுகலை பட்டதாரி. தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றுகிறார். இவரது மனைவி பிரதிபாவும் மென் பொறியாளர். இவர்கள், தங்களுக்கு சொந்தமான 30 ஏக்கர் நிலத்தில், விவசாயம் செய்ய திட்டமிட்டனர். ஆனால் கோலாரில் பழங்கள், காய்கறிகள் விளைவிக்கும் விவசாயிகள் நஷ்டம் அடைந்து படும் கஷ்டத்தை தம்பதி பார்த்துள்ளனர். எனவே காய்கறிகள். பழங்களுக்கு பதிலாக பூக்கள் வளர்க்க முடிவு செய்தனர்.தங்களின் நிலத்தில் 'பாலி ஹவுஸ்' அமைத்து, பல விதமான ரோஜாக்கள் வளர்க்க துவங்கினர். இந்த பூக்கள் தம்பதியின் வாழ்க்கையை மாற்றி அமைத்தது. பூக்கள் அமோகமாக விளைகின்றன. தினமும் 60,000 பூக்கள் விளைகின்றன. ஒரு ரோஜாப்பூ 6 ரூபாய் முதல் 7 ரூபாய் வரை விற்கின்றனர். தினமும் லட்சக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக, இவர்கள் பூக்கள் விளைவித்து பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். பூந்தோட்டத்தை பராமரிக்க 250 க்கும் மேற்பட்டோரை நியமித்துள்ளனர்.

10 ரகங்கள்

ஆடி மாதம் மட்டும் வியாபாரம் ஓரளவு மந்தமாக இருக்கும். மற்ற நாட்களில் எதிர்பார்த்ததை விட, அதிகமான லாபம் சம்பாதித்துள்ளனர். 10 ஆண்டுகளாக நஷ்டத்தையே கண்டது இல்லை. லைட் பிங்க், ஆரஞ்ச், க்ரீம் கலர், மஞ்சள் நிற ரோஜாக்கள் வளர்க்கின்றனர். தாஜ் மஹால், அவலஞ்ச் ஒயிட் உட்பட 10 க்கும் மேற்பட்ட ரகங்களில் ரோஜாக்கள் விளைகின்றன. ஒரு ரோஜாப்பூ 12 முதல் 14 ரூபாய், சில நேரங்களில் டிமாண்ட் இருக்கும் போது 18 முதல் 25 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தரமான பூக்களை அழகாக 'பேக்கிங்' செய்து, ஏற்றுமதி செய்வதால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. வருவாயும் ஏறுமுகமாகிறது.துபாய், சிங்கப்பூர், மலேஷியா, பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். ஆண்டு தோறும் பிப்ரவரியில், ரோஜாக்களுக்கு அதிக மவுசு இருக்கும். பிப்ரவரி 14ம் தேதி, காதலர் தினத்துக்கு, ரோஜாக்கள் அதிகம் விற்பனையானது.பவன்குமார், பிரதிபா தம்பதியால் ஈர்க்கப்பட்டு, விவசாயிகளும் பாலி ஹவுஸ் அமைத்து ரோஜா வளர்ப்பில், ஆர்வம் காட்டுகின்றனர். கஷ்டப்பட்டு விளைவித்த விவசாயிகளை கைவிடாமல், அவர்களின் வாழ்க்கையை செழிப்பாக்கும் சக்தி ரோஜாப்பூக்களுக்கு உள்ளது என்பதற்கு, இந்த இளம் தொழிலதிபர்களே சிறந்த உதாரணமாக திகழ்கின்றனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !