உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாநிலங்கள் பயன்படுத்தாமல் தேங்கியுள்ள ரூ.1.54 லட்சம் கோடி! மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் மெத்தனம்

மாநிலங்கள் பயன்படுத்தாமல் தேங்கியுள்ள ரூ.1.54 லட்சம் கோடி! மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் மெத்தனம்

புதுடில்லி : மத்திய அரசு செயல்படுத்தும், 50க்கும் மேற்பட்ட திட்டங்களுக்காக மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்ட, 2.46 லட்சம் கோடி ரூபாய் நிதியில், 62 சதவீதம் அதாவது, 1.54 லட்சம் கோடி ரூபாய் பயன்படுத்தப்படாமல் தேங்கியுள்ளது. இதை முழுமையாக பயன்படுத்த மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மத்திய அரசின் பிரதமர் ஆவாஸ் யோஜனா, ஜல் ஜீவன் திட்டம், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் உட்பட பல திட்டங்களை செயல்படுத்துவதற்கு, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதி வழங்குகிறது. இது போன்ற நிதியை ஒதுக்குவது, பயன்படுத்துவது போன்றவற்றுக்காக, எஸ்.என்.ஏ., எனப்படும் நோடல் ஏஜன்சி என்ற ஒருங்கிணைப்பு அமைப்பை மாநில அரசுகள் அடையாளம் காட்டுகின்றன. இவற்றின் பெயரில், வங்கிகளில் தனிக் கணக்கு துவக்கப்பட்டு, அதற்கு, மத்திய அரசு நிதியை அனுப்பி வைக்கும்.இவ்வாறு வழங்கப்படும் நிதி பயன்படுத்தப்படுவது தொடர்பாக, மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. முதல் முறையாக இது குறித்த தகவல், 2025 - 2026ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, 500 கோடி ரூபாய்க்கு மேல், நோடல் ஏஜன்சிகளில் தேங்கியுள்ள விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இதில், 50 முக்கிய திட்டங்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, மத்திய அரசு ஒதுக்கியுள்ள, 2.46 லட்சம் கோடி ரூபாயில், கடந்தாண்டு டிச., 31ம் தேதி நிலவரப்படி, 62 சதவீதம், அதாவது, 1.54 லட்சம் கோடி ரூபாய் பயன்படுத்தப்படாமல், மாநிலங்களின் கணக்கில் உள்ளது. இதில், பிரதமர் ஆவாஸ் யோஜனா - கிராமின் எனப்படும் கிராமங்களில் வீட்டு வசதி திட்டம், ஜல் ஜீவன் திட்டம், அம்ருத் எனப்படும் 500 நகர்ப்புற நகரங்களில் புத்துயிரூட்டும் திட்டம், அங்கன்வாடி மற்றும் போஷாக்கு திட்டம்.ஸ்வச் பாரத் எனப்படும் துாய்மை இந்தியா இயக்கம் ஆகிய ஐந்து முக்கிய திட்டங்களில் மட்டும், 1 லட்சம் கோடி ரூபாய் பயன்படுத்தப்படாமல் உள்ளது. அதாவது மாநிலங்களில் பயன்படுத்தப்படாமல் உள்ள நிதியில், 45 சதவீதம் இந்த திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டவை.

இது குறித்து மத்திய நிதித் துறை உயரதிகாரிகள் கூறியதாவது: வளர்ச்சி திட்டங்கள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களுக்காக, மத்திய, மாநில அரசுகள் கடன் வாங்க வேண்டிய நிலையில் உள்ளன. இந்நிலையில், திட்டங்களை செயல்படுத்தாமல் நிதி தேங்கியுள்ளது, தேவையில்லாமல் அதிக வட்டியை செலுத்த வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. இதைத் தடுக்கும் வகையில், மாநிலங்களின் நோடல் ஏஜன்சிகளிடம் தேங்கியுள்ள தொகை தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் அமைச்சகங்கள் மற்றும் துறைகள், அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து இந்தத் தொகையை முழுமையாக பயன்படுத்திக் கொள்வது தொடர்பான ஆய்வு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதன் வாயிலாக திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைவதுடன், அதன் பலன்களும் மக்களுக்கு கிடைக்கும். நிதியில்லை என்பதற்காக எந்த ஒரு திட்டமும் நிறுத்தப்படுவதில்லை. அதே நேரத்தில் உரிய நிதி ஒதுக்கியும், அதை மாநிலங்கள் முறையாக செலவிடாதது, திட்டத்தின் நோக்கத்தை குலைத்துவிடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Ram Moorthy
பிப் 20, 2025 04:29

தமிழகத்தின் வடசென்னை மத்திய சென்னை பகுதியில் இன்னுமும் முறைசாரா தகுதியற்ற கடல் நீரை குடிநீராக தருகிறார்கள் சரியான தண்ணீர் கொடுத்து இருபது வருடங்கள் கழிந்து விட்டது மக்களுக்கு நேரம் சரியில்லை நாற்பது ஐம்பது என்று பணம் கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய இடத்தில் மக்கள் வசிக்கிறார்கள் ஏதாவது கேள்வி கேட்டால் கஜான காலி என்கிறார்கள் வாய் கூசாமல் பொய் பேசுகிறார்கள்


R K Raman
பிப் 19, 2025 14:01

எந்தெந்த மாநிலம் எவ்வளவு செலவழிக்கவில்லை என்று தெரியவில்லை. அதனால் ஒரு அரசைப் பற்றி மட்டும் குறை சொல்ல முடியாது


Sridhar
பிப் 19, 2025 13:31

நம்ம அப்பா ரொம்பவே வருத்தப்படப்போறாரு சே, இவ்வளவு நிதி இருப்பது நம் கண்ணில் படாம போயிடுச்சே யோவ், மந்திரிங்களா என்னய்யா வேலைபாக்கறீங்க, எல்லாத்தையும் சுத்தமா தொடைக்கணும்னு உத்தரவு போட்டுருக்கும்போது எவன்யா விட்டுவச்சது?


GMM
பிப் 19, 2025 13:19

மத்திய திட்டம். கவனம் தேவை. ஊழல், கமிசன் கஷ்டம். மதிப்பீடு, டெண்டர் .. போன்ற பணிச்சுமை. பயன் படுத்தாமல் இருந்தால், வட்டி வசூலிக்கும் முறை வேண்டும். எந்த சிக்கலும் , சேதாரம் இல்லை என்றால், யார் பயப்படுவார் ?


Ramesh Sargam
பிப் 19, 2025 12:22

62 சதவீதம் அதாவது, 1.54 லட்சம் கோடி ரூபாய் பயன்படுத்தப்படாமல் தேங்கியுள்ளது. ஏன் இப்படி வொவொரு மாநில அரசும் தேக்கி வைத்திருக்கிறது? ஒருவேளை எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக ஆட்டைபோடவா?


venugopal s
பிப் 19, 2025 11:26

இதில் எல்லா மாநிலங்களும் தான் அடக்கம்.என்னவோ தமிழ்நாடு மட்டுமே மத்திய அரசின் நிதியை முழுமையாக பயன்படுத்தவில்லை என்பது போல் பேசுவது தவறு.


RAMAKRISHNAN NATESAN
பிப் 19, 2025 09:34

நாங்க பயன்படுத்தினாலும் பேரு உங்களுக்குத்தான் கிடைக்கும் ..... ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளவும் விட மாட்டீங்க ..... மாநிலங்களைக் கொள்ளையடிக்கவும் விட மாட்டீங்க ....... கணக்கும் கேட்பீங்க ...... இப்படியிருந்தா எங்க வருங்கால சந்ததிகள் பிழைப்பு என்னாவது ?


Palanivelu Kandasamy
பிப் 19, 2025 08:21

தொகை போடலையே. அப்போ எல்லா பணமும் செலவழிச்சாச்சா? பின்ன ஏன் எல்லாரும் என்னென்னவோ எழுதுறாங்க ?


Anantharaman
பிப் 19, 2025 07:48

இவ்வாறு நிதியை உபயோகிக்காது மக்களை வஞ்சிக்கும் மாநில நிதியை திரும்பப் பெற்று கடனை அடைத்து விடலாமே.


கி ராஜராஜேஸ்வரி நன்மங்கலம்
பிப் 19, 2025 06:54

இதற்கு தமிழக அரசின் பதிலென்ன மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று எதற்கெடுத்தாலும் சொல்லி கொண்டிருப்பவர்கள் கொடுத்த நிதியை பயனுற பயன்படுத்தி மக்களை மகிழ்விக்கலாமே. இவர்களுக்கு ஆதாயம் இருந்திருந்தால் இந்த திட்டங்கள் எல்லாம் எப்பொழுதோ நிறைவேறியிருக்கும்.இனிமேலாவது மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று குறை கூறாமல் கொடுத்த நிதியை முறையாக பயன்படுத்துவார்கள் என்று நம்புவோமாக


முக்கிய வீடியோ