உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளாவில் ரூ.25 லட்சம் ஏ.டி.எம்., பணம் கொள்ளை

கேரளாவில் ரூ.25 லட்சம் ஏ.டி.எம்., பணம் கொள்ளை

கோழிக்கோடு : கேரளாவில், ஏ.டி.எம்., மையத்தில் நிரப்ப காரில் எடுத்துச் செல்லப்பட்ட 25 லட்சம் ரூபாயை, மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் பையோலியைச் சேர்ந்த சுகைல் என்பவர், வங்கி ஏ.டி.எம்.,களில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர், 25 லட்சம் ரூபாயை காரில் வழக்கம் போல் எடுத்துக் கொண்டு, ஏ.டி.எம்.,ல் நிரப்ப நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தார்.கோழிக்கோட்டில் உள்ள அரிக்குளம் கிராமம் வழியாக சென்றபோது, இவரது காரை பர்தா அணிந்த இருவர் வழிமறித்ததாக கூறப்படுகிறது. சுகைல் காரை நிறுத்தியவுடன், அவர் மீது மிளகாய் பொடியை துாவிய மர்ம நபர்கள், காருடன் அவரை கடத்திச் சென்றனர்.பின்னர், கட்டில் பீடிகா பகுதியில் காரை நிறுத்திய மர்ம நபர்கள், சுஹைலை காரில் கட்டிப்போட்டுவிட்டு, அதிலிருந்த 25 லட்சம் ரூபாய் பணத்துடன் ஓட்டம் பிடித்தனர். டிரைவர் சுகைலின் சத்தம் கேட்டு அங்கு வந்த அப்பகுதியினர், இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து சுகைலை மீட்ட போலீசார், மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். கொள்ளை சம்பவம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இதுகுறித்து கொயிலாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீலால் சந்திரசேகரன் கூறியதாவது: காருடன் மீட்டபோது, அதில் இருந்து 25 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதாக சுகைல் கூறினார். தற்போது, 70 லட்சம் ரூபாய் கொள்ளை போனதாக தெரிவித்துள்ளார். அவ்வளவு அதிகமான தொகையை எடுத்துச் செல்லும் போது, பாதுகாப்புக்கு ஏன் யாரையும் அவர் அழைத்துச் செல்லவில்லை என்ற கேள்வி எழுகிறது.வங்கிக்கான பணத்தை எடுத்துச் செல்லும் போது, வழியில் ஏன் காரை நிறுத்தினார் என தெரியவில்லை. காரை வழிமறித்த நபர்கள் குறித்து தெளிவான பதிலை அவர் கூறவில்லை. முரண்பட்ட தகவல்களை கூறுவதால் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ