சத் பூஜையும், பீஹார் அரசியலும்!
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
நமது சிறப்பு நிருபர்
நம் ஊரில் பொங்கல் பண்டிகை எப்படி விமரிசையாக கொண்டாடப்படுகிறதோ, அதே போன்று, பீஹாரில், 'சத்' பூஜை மக்களிடையே பிரபலம். சூரியனை வழிபடுவதற்காக நடத்தப் படும் இந்த பூஜையில், மக்கள் நதிநீரில் நின்று, கதிரவனுக்கு நன்றி தெரிவிப்பர். மேலும், 'பெண்கள், 36 மணி நேரம் விரதம் இருந்து, தங்கள் கணவன் மற்றும் குழந்தைகள் உடல்நலத்துடன் வாழ வேண்டும்' என சூரியனிடம் வேண்டிக் கொள்வது தான் இந்த பூஜை யின் சாராம்சம்.பீஹார் மட்டுமல்லாமல், உத்தர பிரதேசம், ஜார்க்கண்டிலும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டியின் சூரசம்ஹாரம் நடைபெறும் 27ம் தேதி, இந்த 'சத்' பூஜை துவங்குகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் பணியாற்றும், பீஹாரின் லட்சக்கணக்கான தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி, குடும்பத்துடன் இந்த பூஜையைக் கொண்டாடுவர். இதனால், அனைத்து ரயில் நிலையங்களிலும் கூட்டம் அலைமோதும். டில்லி ரயில் நிலையத்தில் ஒருமுறை, கூட்ட நெரிசலில் பலர் இறந்த சோக நிகழ்வும் நடந்துள்ளது.பீஹார் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பீஹார் செல்லும் தொழிலாளர்களுக்கு, போதிய ரயில் வசதி செய்து தர, பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். எந்தவித அசம்பாவித மும் இல்லாமல், தொழிலாளர்கள் தங்கள் ஊருக்கு திரும்ப, 13,000 சிறப்பு ரயில்கள் விடப்பட்டன. இதற்காக, மூன்று, 'வார் ரூம்'கள் அமைக்கப்பட்டு, 35 ரயில்வே நிலையங்கள், 'சிசிடிவி' வாயிலாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஏறக்குறைய நாள் முழுதும் இந்த வார் ரூமில், ஒவ்வொரு மணிக்கும் என்ன நடக்கிறது, எந்த ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகம், போலீசாரும், ஸ்டேஷன் மாஸ்டரும் எப்படி பணியாற்றுகின்றனர் என கண்காணித்து வருகிறார். அத்துடன், எங்கெல்லாம் கூட்டம் அதிகமாக உள்ளதோ, அங்கு மேலும் ஒரு ரயிலை அனுப்பி வைக்கிறார். அம்பாலா ரயில் நிலையத்தில் ஏகப்பட்ட கூட்டம்; ரயில் நிலையத்திற்கு வெளியே 2 கி.மீ., துாரம் வரை வரிசையில் தொழிலாளர்கள் நின்றிருந்தனர். இதைப் பார்த்த அமைச்சர், ஜலந்தரிலிருந்து உடனே ஒரு ரயிலை அம்பாலாவிற்கு அனுப்பி வைத்தார். அதே போல, குஜராத்தின் சூரத் ரயில் நிலையத்தில் கட்டுக்கடங்காத கூட்டம்; அங்கும் வேறொரு ரயில் அனுப்பி வைக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற, அரசு எதையும் செய்ய தயாராக இருக்கிறது என்பதற்கு இந்த ஏற்பாடுகள் ஒரு உதாரணம்.