இண்டிகோ விமானத்தின் மீது மின்னல் தாக்கிய அதிர்ச்சி சம்பவம்; பயணிகள் பீதி
கோல்கத்தா: கோல்கத்தா விமான நிலையத்தில் புறப்படுவதற்கு தயாராக இருந்த இண்டிகோ விமானத்தின் மீது மின்னல் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.கோல்கத்தா விமான நிலையத்தில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்தது. அங்கு ஏரோபிரிட்ஜ் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அகர்தலா செல்ல வேண்டிய இண்டிகோ விமானத்தில் பயணிகள் ஏறினர்.அப்போது, யாரும் எதிர்பார்க்காத நிலையில், விமானத்தின் மீது திடீரென மின்னல் தாக்கியுள்ளது. விமான நிலைய செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையம் ஏற்கனவே வானிலை எச்சரிக்கைகளை விடுத்திருந்த நிலையில், இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.இதையடுத்து, விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக இறக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மாற்று விமானம் மூலம் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மின்னல் தாக்கிய சம்பவத்தில் ஓடுதளத்தில் பணியில் இருந்த ஊழியர்கள் இருவர் லேசான காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.