நமது கிளினிக்குகளில் டாக்டர்கள் பற்றாக்குறை: நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் இடையூறு
பெங்களூரு: மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்கும் நோக்கில் துவக்கப்பட்ட நமது கிளினிக்குகளில் டாக்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.கர்நாடகா மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், 'நமது கிளினிக்' திட்டத்தை அரசு செயல்படுத்தியது. பெங்களூரில் 2022 பிப்ரவரியில் முதற்கட்டமாக, 108 கிளினிக்குகள் திறக்கப்பட்டன. அதன்பின் இவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. தற்போது நகரில் 243 கிளினிக்குகள் செயல்படுகின்றன.இந்த கிளினிக்குகளுக்கு, தலா ஒரு மருத்துவ அதிகாரி, செவிலியர், ஆய்வக வல்லுனர், 'டி' குரூப் ஊழியர் நியமிக்கப்பட்டு உள்ளனர். காலை 9:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை, கிளினிக்குகள் செயல்படுகின்றன. காய்ச்சல், சளி போன்ற சாதாரண பிரச்னைகளுக்கு, இங்கு சிகிச்சை கிடைக்கிறது. ரத்த பரிசோதனை, நீரிழிவு என வெவ்வேறு மருத்துவ பரிசோதனைகளும் செய்து கொள்ளலாம்.நமது கிளினிக்குகள், மக்களுக்கு மிகவும் உதவியாக உள்ளன. இந்த கிளினிக்குகளில், டாக்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இங்கு பணியாற்ற டாக்டர்கள், ஆர்வம் காண்பிக்கவில்லை. இதனால் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை கிடைப்பதில்லை. 39 கிளினிக்குகளில் டாக்டர்களே இல்லை.குறைந்த ஊதியம், ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் என, பல காரணங்களால் பணியாற்ற, டாக்டர்கள் முன் வரவில்லை. அனைத்து வசதிகள் இருந்தும், நோயாளிகளுக்கு சிகிச்சை கிடைக்கவில்லை. டாக்டர்கள் மட்டுமின்றி, எட்டு கிளினிக்குகளில் நர்ஸ்கள், ஆய்வக வல்லுனர்கள் பற்றாக்குறையும் உள்ளது. இதற்கு ஊதியம் குறைவாக இருப்பதே காரணம். டாக்டர்களுக்கு 47,250 ரூபாய், நர்ஸ்களுக்கு 15,750 ரூபாய் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.நமது கிளினிக்குகளுக்கு, எம்.பி.பி.எஸ்., டாக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். உயர் கல்வி உட்பட, பல்வேறு காரணங்களால், இவர்கள் பணியில் இருந்து விலகுகின்றனர். இதனால் நமது கிளினிக்குகளில், டாக்டர்கள் பணியிடங்கள் காலியாகின்றன. இந்த இடங்கள் நிரப்பப்படும்.கிஷோர் விகாஸ் சுரல்கர்,சிறப்பு கமிஷனர்,சுகாதாரப்பிரிவு,பெங்களூரு மாநகராட்சி