அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகள் பற்றாக்குறை! வெளியில் வாங்க சொல்வதால் நோயாளிகள் அவதி
பெங்களூரு ; கர்நாடகாவின் அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகள் பற்றாக்குறை நிலவுகிறது. மருத்துவர்கள் சீட்டு எழுதி கொடுத்து, வெளியில் வாங்கி வரும்படி கூறுவதால், நோயாளிகள் அவதிப்படுகின்றனர். மருந்துகள் பற்றாக்குறைக்கு என்ன காரணம்மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் வினியோகிக்கும், 800க்கும் மேற்பட்ட மருந்துகளின் தரத்தை, கர்நாடக மருந்துகள் சேகரிப்பு குடோன் அதிகாரிகள் ஆய்வு செய்து, அந்தந்த மாவட்டங்களின் மருந்து குடோன்களுக்கு அனுப்புவர். இங்கிருந்து தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்களுக்கு தேவையான மருந்துகள் அனுப்பப்படும்.கடந்த மூன்று மாதங்களாக, மருந்துகள் அனுப்பும்படி வேண்டுகோள் விடுத்தும், 30 சதவீதம் மருந்துகள் மட்டுமே மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகின்றன. இது, போதுமானதாக இல்லை. அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகள் பற்றாக்குறையால், தேவையான மருந்துகளை டாக்டர்கள் சீட்டு எழுதி கொடுத்து, வெளியே வாங்கி வரும்படி கூறி அனுப்புகின்றனர். இதனால், ஏழை நோயாளிகளுக்கு பொருளாதார சுமை ஏற்படுகிறது.பல்லாரியில் சமீபத்தில் குழந்தை பெற்ற பெண்கள், ஐ.வி., குளுக்கோஸ் திரவத்தால் இறந்ததால், மாநிலம் முழுதும் அரசு மருத்துவமனைகளில் இந்த குளுக்கோஸ் பயன்படுத்த கூடாது என, சுகாதாரத் துறை தடை விதித்தது. குளுக்கோஸ் மாதிரியை ஆய்வகத்துக்கும் அனுப்பியது. இதன் இறுதி அறிக்கை, இன்னும் அரசுக்கு கிடைக்கவில்லை.பெரும்பாலான மாவட்ட அரசு மருத்துவமனைகளின் குடோன்களில் ஐ.வி., குளுக்கோஸ் பாட்டில்கள் பெருமளவில் சேகரிப்பில் உள்ளது. இதை பயன்படுத்த தடை உள்ளதால், தேவையான குளுக்கோஸ் பாட்டில்களை, தனியார் மருந்தகங்களில், அரசு மருத்துவமனைகள் வாங்குகின்றன.இதற்கிடையில், பெங்களூரு உட்பட பல்வேறு மாவட்டங்களில் வானிலை மாற்றத்தால் நோய்கள் பரவுகின்றன. விஷக்காய்ச்சல், டெங்கு, சளி, இருமல் என, பல்வேறு நோய்கள் மக்களை வாட்டி வதைக்கின்றன. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்களில் நோயாளிகள் குவிந்து வருகின்றனர்.இத்தகைய சூழ்நிலையில், அரசு மருத்துவமனைகளில் முக்கியமான மருந்துகள், மாத்திரைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஏழை நோயாளிகள் அதிக விலை கொடுத்து, தனியார் மருந்து கடைகளில் மருந்து வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. விரைவில் மருந்து பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வு காணும்படி, பொது மக்கள் வலியுறுத்துகின்றனர்.இது குறித்து, சுகாதாரத் துறை அதிகாரி சசி பாட்டீல் கூறியதாவது:கடுமையான தொற்று ஏற்பட்டால் அளிக்கப்படும், 'ஹையர் ஆன்டிபயாடிக்' ஊசி மற்றும் மருந்துகள், 'ஆன்டி ஹெமராஜிக், 'கார்டியா வாஸ்குலர், அன்டிடோஸ்ட் அண்ட் வாக்சின்' உட்பட பல்வேறு மருந்துகள் பற்றாக்குறை உள்ளன. கடந்தாண்டு டெண்டர் அழைத்து, வாங்கப்பட்ட மருந்துகள் காலியாகியுள்ளன.மாநில அரசு மருத்துவமனைகளில், ஆண்டு தோறும் எவ்வளவு நோயாளிகள் வருகின்றனர், எந்தெந்த மருந்துகள் தேவை என கணக்கிட்டு, மருந்துகள் வாங்க அரசு டெண்டர் அழைக்கும்.நடப்பாண்டு காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகள் அதிகரித்துள்ளன. எனவே நிர்ணயித்த காலத்தை விட, முன்னதாகவே சில மருந்துகள் காலியாகின. இந்த விஷயத்தை மேலதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். விரைவில் மருந்துகள் வினியோகிப்பதாக கூறியுள்ளனர்.மாவட்ட, தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்களுக்கு, 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தின் நிதியை பயன்படுத்தி, மருந்துகள் வாங்கப்படும். தார்வாட் மாவட்ட மருந்து குடோனில் தற்போது 345 விதமான மருந்துகள் உள்ளன. தேவைக்கு தகுந்தபடி மருந்துகள் வினியோகிக்கப்படுகின்றன.அவசர நேரத்தில் தேவைப்படும் மருந்துகள் இருப்பு உள்ளது. ஒருவேளை பற்றாக்குறை ஏற்பட்டால், வேறு இடங்களில் இருந்து வரவழைக்கப்படுகின்றன. நோயாளிகளுக்கு பிரச்னை ஏற்படாமல் பார்த்து கொள்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.1 நான்கு ஆண்டுகளாக, டெண்டர் அழைக்காதது2 ஆண்டுக்கு ஆண்டு, நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பது3 பல்லாரியில் குழந்தை பெற்ற பெண்கள் இறந்த சம்பவத்துக்கு பின், மருந்துகள் வினியோகம் மந்தமானது4 மருந்துகள் வாங்குவதில், சுகாதாரத் துறையின் கடுமையான விதிமுறைகள்.