'மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தின் பெயரை, 'விக்ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதி சட்டம்' என மாற்றுவதை ஏற்க முடியாது.'தேசத் தந்தை காந்தியின் பெயரை நீக்கும் நடவடிக்கை, அரசியல் சட்ட நெறிமுறைகளுக்கு முற்றிலும் எதிரானது' என, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் இறங்கியதால், லோக்சபாவில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.ஆவேசம்
பார்லி., குளிர் கால கூட்டத்தொடர் முடிவடைய, இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், முக்கிய மசோதாக்களை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. குறிப்பாக, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை, 'விக்ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதி சட்டம்' என, மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, 100 வேலை நாட்கள் என்பது, 125 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் நிதி பங்களிப்பு, 60 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.விக்ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதி சட்டம் - 2025 மசோதாவை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிமுகப்படுத்தினார். இதை எதிர்த்து எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் ஆவேசமாக பேசினர்.காங்., - எம்.பி., பிரியங்கா: தனிநபரின் உரிமை பாதிக்கப்படக் கூடாது என, அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. அதற்கு எதிராக உள்ளது இந்த மசோதா. பலவீனமான மாநிலங்கள் ஏற்கனவே ஜி.எஸ்.டி.,யால் பாதிக்கும் போது, இனி, அது அதிகமாகும். நாட்கள் தான் அதிகரிக்கப்படுகிறதே தவிர, சம்பளம் உயர்த்தப்படவில்லை.கூட்டாட்சி இத்திட்டத்திற்கு மத்திய அரசு ஏற்கனவே நிதி தர மறுக்கிறது. அப்படியிருக்கையில் இத்திட்டத்தின் பெயரை மாற்றுவது ஏன்? காந்தி என் குடும்பத்தைச் சேர்ந்தவர் இல்லை. அனைவரது குடும்பத்திற்கும் சொந்தமானவர். எனவே, பெயரை நீக்காமல் விரிவாக விவாதிக்க நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும். குறிப்பிட்ட கட்சியின் சித்தாந்த அடிப்டையில் எதையும் செய்யக்கூடாது.காங்., - எம்.பி., சசி தரூர்: இது மிகவும் துரதிஷ்ருடவசமானது. காந்தியின் பெயரை நீக்குவது தவறு. அவரது ராம ராஜ்யம் என்பது அரசியலாக மாறக்கூடாது. வரலாற்று ரீதியிலான அநியாயம் இது. விதிமுறைகளுக்கும் எதிரானது. இம்மசோதா, கூட்டாட்சி முறைக்கு எதிரானது.பா.ஜ., மூத்த தலைவரும், பார்லி., விவகார அமைச்சருமான கிரண் ரிஜிஜு கூறுகையில், ''விவாதத்தின் போது சபைக்கே வர மாட்டீர்கள். அதனால் தான் இப்போது, அறிமுகத்தின் போதே பேசிக் கொள்ளலாம் என்று ஆசைப்பட்டு எதிர்த்து பேசுகிறீர்கள்,'' என்றார்.
'காந்தி எங்கள் இதயங்களில்'
மசோதாவை அறிமுகம் செய்து மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் பேசியதாவது: எங்கள் இதயத்தில் இருப்பவர் காந்தி. மறைந்த தலைவர்களான காந்தி, தீன்தயாள் உபாத்யாயா போன்றவர்களுக்கு ஏழை மக்களின் நலன் சார்ந்த கண்ணோட்டம் இருந்தது. 2.13 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே ஐ.மு., கூட்டணி செலவிட்டது. நாங்கள், 8.53 லட்சம் கோடி ரூபாய் வரை செலவிட்டு, இத்திட்டத்தை வலிமைப்படுத்தி உள்ளோம். 125 நாட்கள் வேலை என்பது உறுதி.இது வெறும் பொய் வா க்குறுதி அல்ல. ஜவஹர் வேலைவாய்ப்பு திட்டம் என்று கூட இருந்தது. அதை காங்., மாற்றியது தானே. அது நேருவுக்கு இழுக்கு இல்லையா? காந்தி, எங்கள் மனங்களில் உள்ளார். ராம ராஜ்யம் வேண்டுமென்றார் அவர். அதனால் தான் இந்த மசோதா. ஜி ராம் ஜி என்ற இந்த வாசகம் எதிர்க்கட்சிகளை ஆத்திரப் படுத்துகிறது. இவ்வாறு அவர் பேசினார்.- நமது டில்லி நிருபர் -