உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சென்னையில் தேசிய திறன் மேம்பாட்டு மையம் அமைக்க சிங்கப்பூர் அரசு உதவி: பிரதமர் மோடி

சென்னையில் தேசிய திறன் மேம்பாட்டு மையம் அமைக்க சிங்கப்பூர் அரசு உதவி: பிரதமர் மோடி

புதுடில்லி: இந்தியா - சிங்கப்பூர் இடையே விண்வெளி, ஏ.ஐ., பசுமை கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. தவிர, சென்னையில் தேசிய திறன் மேம்பாட்டு மையம் அமைப்பதற்கும் சிங்கப்பூர் உதவி செய்யவுள்ளது. ''இதன் மூலம் மேம்பட்ட உற்பத்தி துறைக்கு திறமையான மனிதவளம் தயாராகும்,'' என, பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மூன்று நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்த சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், டில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில், பிரதமர் மோடியை நேற்று சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினார். கையெழுத்து இதைத் தொடர்ந்து, இரு நாட்டுக்கும் இடையே விண்வெளி, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு, பசுமை கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மஹாராஷ்டிராவின் மும்பையில், சிங்கப்பூர் அரசு உதவியுடன் இரண்டாம் கட்ட கன்டெய்னர் முனையம் கட்டி முடிக்கப்பட்டது. இதற்காக சிங்கப்பூர் துறைமுக ஆணையம் 8,800 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இந்த முனையத்தை இரு நாட்டுத் தலைவர்களும் 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் துவக்கி வைத்தனர். அதன்பின் பிரதமர் மோடி, சிங்கப்பூர் பிரதமர் வாங் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியா - சிங்கப்பூர் இடையிலான துாதரக உறவு மலர்ந்து 60 ஆண்டுகள் ஆன நிலையில், சிங்கப்பூர் பிரதமர் வாங்கின் வருகை விசேஷமானது. தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில், சிங்கப்பூர் தான் நம் மிகப் பெரிய வர்த்தக கூட்டாளியாக இருக்கிறது. சிங்கப்பூரில் இருந்து மிகப் பெரிய அளவில் இந்தியாவுக்கு முதலீடுகள் குவிந்து வருகின்றன. இரு நாட்டு மக்களுக்கு இடையிலான உறவு மிகவும் ஆழமானது. இருநாடுகளின் வருங்கால திட்டம் குறித்து இருவரும் விரிவாக கலந்து ஆலோசித்தோம். பாரம்பரிய துறைகளோடு இரு நாட்டுக்குமான ஒத்துழைப்பு நின்றுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதை கடந்து மேம்பட்ட உற்பத்தி, பசுமை கப்பல் போக்குவரத்து, திறன் வளர்ப்பு, ராணுவம், அணுசக்தி மற்றும் நகர்ப்புற நீர் மேலாண்மை உள்ளிட்ட துறைகளிலும் இரு நாட்டுக்கும் இடையே நல்லுறவை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தி வருகிறோம். நட்புறவு விரிவான இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை எட்டவும் இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. பரஸ்பர வர்த்தகத்தை விரைவுப்படுத்த, 'ஆசியான்' அமைப்பு நாடுகளுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை குறித்த காலக்கெடுவுக்குள் மதிப்பாய்வு செய்ய முடிவு செய்துள்ளோம். இந்தியா - சிங்கப்பூர் இடையிலான நட்புறவுக்கு, நம் மாநிலங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. கடந்த ஜனவரி மாதம் சிங்கப்பூர் அதிபர் தர்மன் இந்தியாவுக்கு வந்தபோது ஒடிஷாவுக்கு சென்றார். அதேபோல், கடந்த ஓராண்டில் ஒடிஷா, தெலுங்கானா, அசாம், ஆந்திரா மாநில முதல்வர்களும் சிங்கப்பூருக்கு சென்று வந்தனர். குஜராத்தில் அமைந்துள்ள, 'கிப்ட் சிட்டி', இரு நாடுகளின் வர்த்தகத்திற்கும் புதிய பாலமாக உருவெடுத்துள்ளது. கடந்த ஆண்டு கையெழுத்தான செமிகண்டக்டர் கூட்டுறவு ஒப்பந்தம், அத்துறையின் ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கும் புதிய வழியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. சென்னையில் தேசிய திறன் வளர்ப்பு மேம்பாட்டு மையத்தை அமைப்பதற்கும், சிங்கப்பூர் உதவி செய்து வருகிறது. இந்த மையம் மூலம் மேம்பட்ட உற்பத்தி துறைக்கு தேவையான திறன் பெற்ற மனித வளங்களை வழங்க முடியும். ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் மற்றும் பிற டிஜிட்டல் தொழில்நுட்பத் துறைகளிலும் இரு நாட்டுக்கும் இடையே விரிவான ஒத்துழைப்பை ஏற்படுத்தவும் முடிவு செய்துள்ளோம். பயங்கரவாதம் குறித்து இரு நாடுகளும் பொதுவான கவலைகளை பகிர்ந்து கொண்டன. பயங்கரவாதத்தை எதிர்க்க ஒன்றுபடுவது, மனிதாபிமானம் உள்ள அனைத்து நாடுகளின் கடமை என நாங்கள் கருதுகிறோம். ஆதரவு பஹல்காம் பயங்கரவாத சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, இந்திய மக்களின் துயரத்தில் பங்கெடுத்த சிங்கப்பூர் அரசுக்கும், பிரதமர் லாரன்ஸ் வாங்குக்கும் இந்த தருணத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கும் சிங்கப்பூர் ஆதரவு அளித்ததற்காக நன்றி கூறுகிறேன். இவ்வாறு பிரதமர் பேசினார். இந்தியாவின் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டாளராக சிங்கப்பூர் திகழ்கிறது. இந்தியாவின் நேரடி அந்நிய முதலீடுகளில் கால் பங்கு சிங்கப்பூரின் முதலீடாக தான் இருக்கும். வரும் ஆண்டுகளில், சிங்கப்பூர் - இந்தியா இடையிலான நட்புறவை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல பிரதமர் மோடியுடன் கைகோர்த்து பணியாற்றுவதை எதிர்நோக்கி இருக்கிறேன். சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் இந்தியாவில் இருந்தே ஏவப்பட்டுள்ளன. புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் இந்த துறையில் கூட்டுறவை மேலும் வலுப்படுத்த விரும்புகிறோம். --லாரன்ஸ் வாங், சிங்கப்பூர் பிரதமர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

அப்பாவி
செப் 05, 2025 17:09

தம்மாத்தூண்டு சிங்கப்பூர் நமக்கு உதவி செய்யுதாம். ஊழலை நிப்பாட்ட ஏதாவது உதவி செய்யலாமே...


Rajasekar Jayaraman
செப் 05, 2025 08:30

உடனடியாக தமிழக ஸ்டிக்கர் ஓட்டப்படும்.


Mani . V
செப் 05, 2025 05:58

கோபாலபுரம் வாழ்நாள் கொத்தடிமைகள்: "அப்பாவின் மாடல் ஆட்சியின் முயற்சியால் அமைந்தது.


Ramesh Sargam
செப் 05, 2025 03:10

மையம் அமைந்தவுடன் முதல்வர் ஸ்டாலின் என்னால்தான் அமைந்தது என்று as usual பீத்திக்கொள்வார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை