உள்ளூர் செய்திகள்

வியூகம்!

உத்தரகண்ட் சட்டசபை தேர்தலில் 3வது வெற்றிக்கு பா.ஜ., அரசுக்கு எதிரான நெருக்கடிகளை சமாளிக்கும் பணி தீவிரம் ஓட்டுச்சாவடி அளவில் கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை– சிறப்பு நிருபர் –: உத்தரகண்ட் சட்டசபை தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்க ஆளும் பா.ஜ., தீவிரமாக களமிறங்கி உள்ளது. இதற்காக தேர்தல் பணிகளை பூத் அளவு வரை நுணுக்கமாக கண்காணித்து, கட்சியின் அமைப்பு மற்றும் களப்பணிகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை அக்கட்சி தொடங்கியுள்ளது. உத்தரகண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. 70 சட்டசபை தொகுதிகளுடைய இம்மாநிலத்தில், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் நடக்கிறது. மாநிலம் உருவான, 2000 முதல், ஒரு கட்சி தொடர்ந்து இரு முறை ஆட்சியில் இருந்ததில்லை. 2022 சட்டசபை தேர்தலில், இதை பா.ஜ., முறியடித்தது. இந்த சூழலில், அடுத்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பா.ஜ., முனைப்புடன் உள்ளது. கடந்த மே மாதம் உத்தரகண்டுக்கு வந்த பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபின், மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை அவர் வழங்கினார். உத்தரகண்ட் முழுதும், தேர்தல் கமிஷன் சார்பில் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடக்கிறது. இறுதி வாக்காளர் பட்டியல் செப்., 15ல் வெளியாகிறது. இந்த தேர்தலில், கட்சியில் நிலவும் கோஷ்டி பூசல், ஆட்சிக்கு எதிரான மனநிலை, சட்டம் – ஒழுங்கு நிலவரம் உள்ளிட்டவை பா.ஜ.,வுக்கு சவால்களாக உள்ளன. மேலும், பழங்குடியின மக்களின் பாதுகாப்புக்காக அரசியலமைப்பின், 5-வது அட்டவணையை அமல்படுத்த வேண்டும் என்ற பல்வேறு அமைப்புகளின் கோரிக்கையும் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஹல்த்வானியில் கடந்த 8-ல், காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்ற பேரணி நடந்த இடத்தில், ஸ்ரீராம் சேனா சார்பில், சுத்திகரிப்பு யாகம் நடந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இது, பா.ஜ., –- காங்., இடையிலான மோதலை தீவிரப்படுத்தி உள்ளது. அரசுக்கு எதிரான நெருக்கடிகளை சமாளிக்கும் வகையில், மாநில நிர்வாகிகளுடன் பா.ஜ., மேலிடம் முக்கிய ஆலோசனை நடத்தியது. தொகுதி வாரியாக கட்சியின் செயல்பாடுகள் மற்றும் ஓட்டுச்சாவடி அளவில் தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. வரும் தேர்தலில் ஆட்சியைத் தக்கவைப்பதே பா.ஜ.,வின் ஒரே குறிக்கோளாக உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., தோல்வி அடைந்த, 23 சட்டசபை தொகுதிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இந்த தொகுதிகளில் கட்சியின் அமைப்பு மற்றும் களப்பணிகளை வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி போட்டியிடும் காதிமா தொகுதியும் ஒன்று. 2022 தேர்தலில் தன் பாரம்பரிய தொகுதியான காதிமாவில் தோல்வியடைந்த முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பின், சம்பாவத் தொகுதி இடைத்தேர்தலில் வென்று முதல்வராக தொடர்ந்தார். காதிமா தொகுதியில் வெற்றி பெறும் பொறுப்பு, அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதே போல், பா.ஜ., மாநில தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான மகேந்திர பட், பீரான் கலியார் தொகுதிக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள இந்த முஸ்லிம் பெரும்பான்மை தொகுதியில், பா.ஜ., இதுவரை வெற்றி பெற்றதில்லை. 2012 முதல் காங்., வேட்பாளர் புர்கான் அகமது இத்தொகுதியில் வெற்றி பெற்று வருகிறார். மற்றொரு சவாலான தொகுதியான மங்ளூரின் பொறுப்பு, பா.ஜ., ராஜ்யசபா எம்.பி., நரேஷ் பன்சாலிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் இத்தொகுதியில், இதுவரை பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் காங்., வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர். இதே போல் பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் அஜய் தம்தா, முன்னாள் முதல்வர்கள் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், திரிவேந்திர சிங் ராவத், தீரத் சிங் ராவத் உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கும், கடந்த தேர்தலில் பா.ஜ., இழந்த தொகுதிகளை கண்காணிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கு நேரடியாக சென்று, உள்ளூர் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளனர். பூத் அளவில் கட்சியை வலுப்படுத்துதல், தொகுதியின் அரசியல் நிலவரத்தை மதிப்பிடுதல் உள்ளிட்ட பணிகள் நடக்க உள்ளன. இதற்காக மாவட்ட அளவில் இருந்து மாநில தலைமை வரை கட்சியின் கட்டமைப்பை பா.ஜ., வலுப்படுத்தி வருகிறது. ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் வாக்காளர்களுடன் தொடர்பை அதிகரிக்கவும், உள்ளூர் பிரச்னைகளை தீர்த்து வைக்கவும் பா.ஜ., திட்டமிட்டுள்ளது. பா.ஜ.,விடம் இருந்து ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் காங்கிரசும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. செப்டம்பரில் டேராடூன் மற்றும் ஹரித்வாரில், ‘பரிவர்த்தன் யாத்திரை’ நடத்த காங்., திட்டமிட்டுள்ளது. குமாவுன், தெஹ்ரி, கர்வால் பகுதிகளில் முதல் கட்ட யாத்திரை ஏற்கனவே முடிவடைந்துள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்