கிராம பள்ளிகளில் ஸ்ட்ரீம் லேப்கள்
பெங்களூரு; கர்நாடக அரசு, கிராம புறங்களில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள், அறிவியல் கற்றலை ஊக்குவிக்கும் வகையில், 'ஸ்ட்ரீம் லேப்கள்' கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது.பெங்களூரு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அறிவுறுத்தலின் படி, மாநிலம் முழுவதும் கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின், அறிவியல் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் 'ஸ்ட்ரீம் லேப்கள்' கட்டுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து வருகிறது. இந்த லேப்களில், மாணவர்கள் மனப்பாடம் செய்யும் அறிவியல் பாடங்களை நடைமுறையில் செய்து பார்ப்பர். இதன் மூலம் மனப்பாடம் செய்வதற்கும், நடைமுறை கல்விக்கும் இடையே உள்ள தொடர்பு குறையும். மாணவர்களுக்கும் அறிவியல் மீதான ஈர்ப்பு அதிகமாகும்.அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் என்.எஸ். போசராஜு கூறுகையில், ''இத்திட்டம் குறித்து அரசு தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது. கிராமப்புறங்களில் உள்ள உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மீதான ஆர்வத்தை அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கம். மாணவர்கள் நிஜ வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகள் கையாளும் அளவிற்கு தயார் படுத்தப்படுவர். அடுத்த பட்ஜெட்டில்இத்திட்டம் வரக்கூடும்,'' என்றார்.