உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாணவர் விடுதிக்கு தரமற்ற உணவு பொருட்கள்

மாணவர் விடுதிக்கு தரமற்ற உணவு பொருட்கள்

பெலகாவி: ''சமூக நலத்துறை நிர்வகிக்கும் எஸ்.சி., - எஸ்.டி., மாணவர் விடுதிகளுக்கு தரமற்ற உணவை வினியோகிக்கும் ஒப்பந்ததாரர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மாநில சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா தெரிவித்தார்.மேல்சபை கேள்வி நேரத்தில் நேற்று நடந்த விவாதம்: எதிர்க்கட்சித் தலைவர் சலவாதி நாராயணசாமி: 10 - 15 ஆண்டுகளாக, மாவட்ட அளவில் ஒருவரே, டெண்டரில் பங்கேற்கிறார். டெண்டர் பெறும் இவர், மாணவர் விடுதிகளுக்கு தரமற்ற உணவுப் பொருட்கள் வினியோகிக்கிறார். இது பெரிய மாபியா. இதற்கு கடிவாளம் போட வேண்டும்.இது அதிகாரிகள் அளவில் நடப்பதால், அமைச்சர்களின் கவனத்துக்கு வருவதே இல்லை. பல ஆண்டுகளாக, அதே நபர்களுக்கு டெண்டர் அளிக்கின்றனர். அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் உட்பட அனைத்து பொருட்களும் தரமற்றவையாக உள்ளன. இத்தகையோரை கருப்புப் பட்டியலில் ஏன் சேர்க்க கூடாது? அமைச்சர் மஹாதேவப்பா: சமீபத்தில் முதல்வர் சித்தராமையா, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, பல ஆண்டுகளாக டெண்டரில் பங்கேற்போருக்கு, மீண்டும்,மீண்டும் டெண்டர் அளிக்க வேண்டாம் என, உத்தர விட்டுள்ளார். இதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.மாணவர்களின் உணவுக்கு வினியோகிக்கும் பொருட்கள், தரமானதாக இருக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு தெளிவாக உத்தரவிட்டுள்ளோம். இதை பின்பற்றாதோர் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.எம்.எஸ்.ஐ.எல்., மூலம் உணவு தானியங்கள் வினியோகிக்க வேண்டும். இதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. தினமும் மாணவர்களுக்கு என் னென்ன உணவு வழங்கப்படுகிறது என்ற மெனுவை அறிவிக்க வேண்டும். மாணவர்களுக்கு துாய்மையான, சுகாதாரமான உணவுகள் வழங்க வேண்டும்.கொப்பால், ராய்ச்சூர் மாவட்டங்களின் மாணவர் விடுதிகளில், காலியாக உள்ள மேற்பார்வை ஊழியர்கள் பணியிடங்கள், கே.பி.எஸ்.சி., மூலம் நிரப்பப்படும். மொத்தம் 106 பணியிடங்கள் வழங்கப்பட்டன. இவற்றில் முதற்கட்டமாக, இரண்டு மாவட்டங்களுக்கும், தலா 14 பணியிடங்கள் நிரப்பப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி