பல்லாரி செல்ல ஜனார்த்தன ரெட்டிக்கு உச்ச நீதிமன்றம் பச்சைக்கொடி
பல்லாரி : முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, பல்லாரிக்கு செல்ல விதித்திருந்த தடையை, உச்சநீதிமன்றம் நீக்கியது.கர்நாடகாவில் செல்வாக்குமிக்க அரசியல் தலைவராக திகழ்ந்தவர் ஜனார்த்தன ரெட்டி. சுரங்க அதிபரான இவர், மாநிலத்தில் முதன்முறையாக பா.ஜ., ஆட்சிக்கு வருவதற்கு பாடுபட்டார்.சட்டவிரோத சுரங்கத்தொழில் வழக்கு, இவரது வாழ்க்கையை புரட்டி போட்டது. இந்த வழக்கு தொடர்பாக, 2011 செப்டம்பர் 5ம் தேதி, ஜனார்த்தன ரெட்டியை சி.பி.ஐ., கைது செய்தது. ஆந்திராவின், சர்லபல்லி சிறையில் அடைக்கப்பட்டார்; ஆண்டுக்கணக்கில் சிறையில் இருந்தார். நிபந்தனை ஜாமின்
கடந்த 2015ல் அவருக்கு உச்ச நீதிமன்றம், நிபந்தனை ஜாமின் வழங்கியது. அவர், சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளதால், சுரங்கத்தொழில் நடத்திய பல்லாரி மற்றும் ஆந்திராவின் அனந்தபூர், கடப்பா மாவட்டத்துக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது.மகளின் திருமணம், பேத்தியின் நாமகரணம் உட்பட நிகழ்ச்சிகளில் பங்கேற்க சில நாட்கள் மட்டும் பல்லாரிக்குச் செல்ல அனுமதி கிடைத்தது. மற்றபடி 13 ஆண்டுகளாக அவர், தன் சொந்த மாவட்டமான பல்லாரியில் இருந்து ஜனார்த்தன ரெட்டி விலகியே இருந்தார்.இதற்கிடையில் பல்லாரி, அனந்தபூர், கடப்பாவுக்கு விதித்த தடையை அகற்றி, உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதனால் அவரது குடும்பத்தினரும், ஆதரவாளர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். தரிசனம்
சிறையில் இருந்து வந்து, சில காலம் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன்பின் தனி கட்சி துவங்கி, 2023 சட்டசபை தேர்தலில், கொப்பாலின் கங்காவதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது மீண்டும் பா.ஜ.,வில் சேர்ந்து, தன் கட்சியையும் பா.ஜ.,வில் இணைத்தார்.பெங்களூரு மல்லேஸ்வரம் பா.ஜ., அலுவலகத்தில், நேற்று ஜனார்த்தன ரெட்டி அளித்த பேட்டி:நவராத்திரி அக்டோபர் 3ம் தேதி, துவங்குகிறது. அன்றைய தினம் காலையில், நான் பல்லாரிக்கு செல்கிறேன். 13 ஆண்டுகளுக்கு பின், பல்லாரிக்கு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. என் இறுதி மூச்சு உள்ளவரை, பல்லாரியில் இருப்பேன். மக்களுடன் சந்திப்பு
இங்குள்ள பல கோவில்களுக்கு சென்று தரிசிக்க திட்டமிட்டுள்ளேன். பிறந்த இடம் ஒவ்வொருவருக்கும் முக்கியமானதாக இருக்கும். எந்த ஊராக இருந்தாலும், நம்மூரே மேல் என, மூத்தவர்கள் கூறுவர். முதலில் கங்காவதிக்கு சென்று, ஹனுமனை தரிசிப்பேன். எனக்கு அரசியல் மறுவாழ்வு கொடுத்த மக்களை சந்திப்பேன்.நான் பா.ஜ.,வின் சாதாரண தொண்டன். வரும் நாட்களில், நான் எங்கு போட்டியிட வேண்டும் என்பதை, கட்சி முடிவு செய்யும். அதன்படி நடந்து கொள்வேன். சங்கடங்கள் வரும் போது, ஸ்ரீமன் நாராயணா, ராமசந்திரா என, வேண்டுவோம். கடவுளே கஷ்டங்களை அனுபவித்தார்; நாம் எம்மாத்திரம்.பல்லாரியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தினேன். அது மக்களுக்கும் தெரியும். எடியூரப்பா முதல்வராக இருந்த போது, பெரிய அளவில் பணிகள் நடந்தன. பல்லாரி வளர்ச்சி விஷயத்தில், எனக்கு பல கனவுகள் உள்ளன. அதை நிறைவேற்றுவேன்.இவ்வாறு அவர் கூறினார்.