தமிழ் மொழி மலையாளத்தின் தாய்!
பாலக்காடு; கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம், சித்தூர் அரசுக் கல்லூரி தமிழ் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து உருவாக்கிய 'விதை' அமைப்பு, 30 நிகழ்ச்சிகள் நடத்தி உள்ளது.இது குறித்து, அமைப்பின் தலைவர் ரமேஷ்குமார் கூறியதாவது:தமிழ் மொழி, மலையாளத்தின் தாய் என்ற கருத்து இருந்தாலும், தமிழுக்கும் மலையாளத்துக்கும் பிரிக்க முடியாத தொடர்பு இருக்கிறது என்ற கருத்து வலுவாக உள்ளது.கேரளாவில் கிட்டத்தட்ட எல்லோருக்கும் தமிழ் பேச தெரியும். தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு அளித்தவர்களில் கேரளாவை சேர்ந்தவர்களும் உள்ளனர்.'ராம சரிதம், ராமா கதைப்பாட்டு, இரவிக்குட்டிப்பிள்ளை, போர்ப்பாட்டு,' போன்றவை கேரளாவில் தமிழ் செழித்து நின்ற காலத்தில் இயற்றப்பட்ட படைப்புகளாகும்.இவ்வாறு, அவர் கூறினார்.செயலாளர் சித்ரா கூறியதாவது:ஒவ்வொரு மாதமும் நடக்கும் நிகழ்ச்சியில், தமிழ்- - மலையாளம் எழுத்தாளர்களின் நுால்கள் மற்றும் புது எழுத்தாளர்களின் கதைகள், கவிதைகள், ஆய்வுகள் ஆகியவை குறித்து விவாதம் செய்து வருகிறோம்.இது தவிர, புது திரைப்படங்கள் மற்றும் நாடகங்கள் குறித்தும் விவாதிக்கிறோம். தமிழில் உள்ள பிரபல எழுத்தாளர்களிடம் பேட்டி எடுத்து வெளியிடுவதற்காக, http://potraamarai.comஎன்ற பெயரில் 'ஆன்லைன்' பத்திரிகையும் நடத்தி வருகிறோம்.இந்த நிகழ்ச்சிகளில் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களும் கலந்து கொள்கின்றனர். இதையொட்டி மாணவர்களுக்கான இலக்கியப் போட்டிகள், வினாடி -- வினா போட்டிகள், சிறப்பு விவாதங்களும் நடத்துகிறோம். இளம் எழுத்தாளர்களுக்கான முகாம்களும் நடத்தி வருகிறோம்.தத்தமங்கலம் 'கவின்மணி சுடர்' என்ற இடத்தில் இந்நிகழ்ச்சியை நடத்துகிறோம். வரும், 25ம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் மாதவன் அதிகன் பங்கேற்கும் நிகழ்ச்சி நடத்துகிறோம்.இவ்வாறு, கூறினார்.