உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிக விளம்பரங்கள் போட்டு டார்ச்சர்; திரையரங்கிற்கு ரூ.1.28 லட்சம் அபராதம்

அதிக விளம்பரங்கள் போட்டு டார்ச்சர்; திரையரங்கிற்கு ரூ.1.28 லட்சம் அபராதம்

பெங்களூரு : குறிப்பிட்ட நேரத்தில் திரைப்படத்தை துவங்காமல், 25 நிமிடங்களுக்கு விளம்பரங்களை திரையிட்ட பிரபல பி.வி.ஆர்.,சினிமாஸ் நிறுவனத்துக்கு, பெங்களூரு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் 1.28 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. பி.வி.ஆர்., சினிமாஸ் என்ற கார்ப்பரேட் நிறுவனம் நாடு முழுதும் உள்ள முக்கிய நகரங்களில் திரையரங்குகளை நடத்தி வருகிறது. 2023, டிச., 26ல் அபிஷேக் என்ற நபர், தன் குடும்ப உறுப்பினர்கள் இருவருடன், பெங்களூரு ஓரியன் மாலில் உள்ள பி.வி.ஆர்., - ஐநாக்ஸ் திரையரங்கில் சாம் பஹதுார் என்ற திரைப்படத்தை பார்க்க சென்றார். மாலை 4:05 மணிக்கு திரைப்படம் துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 25 நிமிடங்களுக்கு விளம்பரங்கள் மற்றும் திரைப்படங்களின் டிரைய்லர்கள் திரையிடப்பட்டன. பின் 4:30 மணிக்கு சாம் பஹதுார் திரைப்படம் திரையிடப்பட்டது. இது குறித்து, பெங்களூரு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் அபிஷேக் முறையிட்டார். குறிப்பிட்ட நேரத்தில் படத்தை துவங்காமல், விளம்பரங்களை திரையிட்டது மன உளைச்சலை ஏற்படுத்தியதாக அவர் மனுவில் தெரிவித்திருந்தார்.

உரிமை இல்லை

விளம்பரங்கள் திரையிட்டது தொடர்பான, 'வீடியோ' ஆதாரங்களையும் அவர் நீதிமன்றத்தில் வழங்கினார். இது தொடர்பான விசாரணையின் போது ஆஜரான பி.வி.ஆர்., தரப்பு வழக்கறிஞர், 'திரைப்படத்துக்கு முன் அரசின் பொது சேவை விளம்பரங்கள் காட்டப்பட்டன. 'இது பொதுமக்களின் நன்மைக்காக போடப்பட்டது. அனுமதியின்றி மனுதாரர் திரையரங்கில் போடப்பட்ட விளம்பரங்களை படம் பிடித்துள்ளார்' என, வாதிட்டார். இதை மறுத்த நீதிமன்றம், 'பொது சேவை விளம்பரங்கள், 10 நிமிடங்களுக்கு மட்டுமே திரையிட வேண்டும்; அவர் வீடியோவில் பதிவு செய்தது விளம்பரங்களை தானே தவிர, திரைப்படத்தை அல்ல' என, தெரிவித்தது. பின் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:மனுதாரர் சமர்ப்பித்த ஆதாரங்களின்படி, திரைப்படம் துவங்கும் முன் போடப்பட்ட விளம்பரங்களில் 95 சதவீதம், தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமானது. பல்வேறு பணிகளுடன் பிசியாக இருக்கும் நபர்கள், தேவையில்லாத விளம்பரங்களைப் பார்ப்பது மிகவும் கடினமானது. குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் படம் பார்க்க வருவதால், அவர்களுக்கு வேறு வேலை இல்லை என அர்த்தம் கிடையாது. இன்றைய உலகில் நேரம் தான் பணம். ஒவ்வொருவரின் நேரமும் மதிப்புமிக்கது. ஒருவரின் நேரத்தை பறித்து பணம் சம்பாதிக்க யாருக்கும் உரிமையில்லை.

டிபாசிட்

ஆகையால், குறிப்பிட்ட நேரத்தில் திரைப்படத்தை துவங்காமல் இருந்த பி.வி.ஆர்., சினிமாஸ் நிறுவனத்துக்கு 1.28 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இதில், 1 லட்சம் ரூபாயை, நுகர்வோர் நல நிதியில் டிபாசிட் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக 20,000 ரூபாயும், வழக்கு செலவுக்கு 8,000 ரூபாயும் வழங்க வேண்டும். இனிவரும் காலங்களில், திரைப்படம் துவங்குவது தொடர்பாக, சரியான நேரத்தை டிக்கெட்டில் குறிப்பிட வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ஆரூர் ரங்
பிப் 20, 2025 11:24

சினிமா பார்க்க கூட்டம் குறைந்து வருவது இது போன்ற தலைவலிகளால்தான். விளம்பரங்களால் அரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்களுக்கு வருமானம் கிடைப்பதில்லை. டிஜிட்டல் ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு மட்டுமே வருமானம். விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு அவசியமே.


Ravi Shankar
பிப் 20, 2025 09:10

இன்னொரு மறைமுக வருவாய் ஈட்டுகிறார்கள் . 25 நிமிடம் விளம்பரம் முடித்து அந்த பாடாவதியான படத்தை பார்த்து விட்டு வந்தால், பார்க்கிங் கட்டணம் வேற. 2.30 மணி படத்திற்கு 4 மணி நேரம் பார்க்கிங் கட்டணம். ஒரு காருக்கு ஒரு மணி நேரம் எக்ஸ்ட்ரா பணம் என்றால் எத்தனை ஷோ, எத்தணை கார்? கொள்ளை அடிக்க தொடுங்காவதால் தான் மக்கள் தியேட்டர் பக்கம் வர தயங்குகிறார்கள். தெலங்கானாவில் கேரளாவில் பார்க்கிங் கட்டணம் தியேட்டரில் இல்லை. மாலில் மட்டுமே வசூலிக்க படுகிறது.


aaruthirumalai
பிப் 20, 2025 08:14

தனியார் தொலைக்காட்சிகளிலும் வரைமுறை இல்லாமல் விளம்பர காட்சிகள் வருகின்றன. அதனையும் வரைமுறை படுத்த வேண்டும்.


அப்பாவி
பிப் 20, 2025 07:19

எப்போ ஃபோன் பண்ணாலும் சைபர் குற்றம். சந்தேகம் வந்தா 1930 க்கு போன் பண்ணுங்கன்னு இவிங்க பண்ற டார்ச்சரை எங்கே போய் புலம்ப. போதும் நிறுத்துங்க. ஒரு நாளைக்கு ஒரு போன் காலுக்கு மட்டும் வர்ர மாதிரி ஏ.ஐ எழவை பயன் படுத்துங்க.


பாலா
பிப் 20, 2025 08:01

உண்மையான அப்பாவிகள் அப்போதும் ஏமாறுகிறார்கள். இந்த விஷயத்தில் இன்னும் அதிக விளம்பரம் தேவை.


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
பிப் 20, 2025 06:24

தனியார் டெலிவிஷன் சேனல்களுக்கும் கடுமையான விதிமுறைகள் வேண்டும். பொய்யான தகவல்களை தரும் டிவி சேனல்கள் நிரந்தரமாக முடக்கப்பட வேண்டும்.


Ram
பிப் 20, 2025 06:23

இந்த தெயட்டர் பசங்களுக்கு சரியான சாட்டையடி ....


நிக்கோல்தாம்சன்
பிப் 20, 2025 05:44

அவ்ளோ காசு வாங்குறாங்க , ஆனாலும் விளம்பரதாரரிடமும் மடிப்பிச்சை ஏந்துறாங்க ?


புதிய வீடியோ