உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆசிரியர்களின் அலட்சியமே 7 குழந்தைகள் இறப்புக்கு காரணம்: மாணவர்கள் குற்றச்சாட்டு

ஆசிரியர்களின் அலட்சியமே 7 குழந்தைகள் இறப்புக்கு காரணம்: மாணவர்கள் குற்றச்சாட்டு

ஜலாவர்: 'ராஜஸ்தானில், அரசு பள்ளி கூரை இடிந்து விழுந்து ஏழு குழுந்தைகள் பலியான சம்பவத்துக்கு, ஆசிரியர்களின் அலட்சியமே காரணம்' என, மாணவர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டத்தில் உள்ள பிப்லோடு கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் காலை, வகுப்பறையில் மாணவர்கள் இறைவணக்கம் பாடும்போது, கட்டடத்தின் கூரை இடிந்து விழுந்ததில் ஏழு குழந்தைகள் உயிரிழந்தனர்; 27 பேர் காயம் அடைந்தனர். இறை வணக்கம் இந்த பள்ளி கட்டடம் பாழடைந்த நிலையில் இருந்தும் ஆசிரியர்கள் அலட்சியமாக செயல்பட்டதே, ஏழு பேர் பலியாக காரணம் என மாணவர்கள் குற்றஞ்சாட்டினர். இந்த விபத்து நடந்தபோது வகுப்பில் இருந்த மாணவி கூறியதாவது: சம்பவத்தன்று காலை பள்ளிக்கு வந்ததும் வகுப்பறையில் இறைவணக்கம் பாட, வரிசையில் நிற்குமாறு ஆசிரியர் கூறினார். அப்போது கூரையில் இருந்து சரளைக்கற்கள் உதிர்ந்து விழுந்ததை ஆசிரியரிடம் தெரிவித்தேன். ஆனால், அவர் எதுவும் விழாது போய் வரிசையில் நில்லுங்கள் என்று அலட்சியம் செய்தார். அடுத்த சில வினாடி களில் பள்ளி கூரை இடிந்து விழுந்ததில், ஏழு பேர் பலியாகினர். நான் வெளியே சென்றுவிட்டதால் உயிர் தப்பினேன். இவ்வாறு அவர் கூறினார். மற்றொரு மாணவர் கூறுகையில், 'பள்ளி கூரை இடிந்து விழுந்தபோது ஆசிரியர் உப்புமா சாப்பிட்டுக் கொண்டிருந்தார்' என, தெரிவித்தார். உத்தரவு இந்த விபத்து தொடர்பாக பள்ளி ஊழியர்கள் ஐந்து பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஏ ழு குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பாக உயர் மட்ட அதிகாரிகள் அளவில் கூட்டம் நடத்திய மாநில முதல்வர் பஜன்லால் சர்மா, பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்து, அவை பாழடைந்த நிலையில் இல்லை என்பதை உறுதி செய்யும்படி அதிகாரிக ளுக்கு உத்தரவிட்டார்.

பாதுகாப்பு தணிக்கை கட்டாயம்

ராஜஸ்தான் பள்ளி விபத்தை தொடர்ந்து, பள்ளிகளில் பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்வதை மத்திய கல்வி அமைச்சகம் கட்டாயமாக்கியுள்ளது. இது தொடர்பாக கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: பள்ளி கட்டடம் உறுதியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய கட்டாய தணிக்கை செய்ய வேண்டும் என்று, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில் தீ பாதுகாப்பு நடவடிக்கை உள்ளதா, அவசரகாலத்தில் வெளியேற வசதி, முறையான மின் ஒயரிங் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். தீப்பிடித்தல் போன்ற அவசரகாலங்களில் முதலுதவி செய்வது, கட்டடங்களை விட்டு பாதுகாப்பாக வெளியேறுவது போன்றவை குறித்து ஊழியர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு பயிற்சி அளிக்க வேண்டும். இதற்காக உள்ளூரில் உள்ள தீயணைப்புத் துறையினர், போலீசார், மருத்துவ நிறுவனங்கள் உதவியுடன் ஒத்திகை நடத்தப்பட வேண்டும். பள்ளி கட்டடம் அபாய நிலையில் இருந்தால் அல்லது மாணவர்கள் அழைத்து செல்லப்படும் வாகனங்கள் தரமற்று இருந்தாலும் அது குறித்து பெற்றோர், உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை தாமதமின்றி செயல்படுத்த கல்வித்துறை, கல்வி வாரியங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Gokul Krishnan
ஜூலை 27, 2025 10:04

பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் வருகை என்றால் எத்தனை முறை என்றாலும் ரோட் போடுவார்கள் இரவோடு இரவாக சரி செய்வார்கள் பொது மக்களின் உயிருக்கு இது தான் விலை யார் ஆட்சி செய்தாலும்


Padmasridharan
ஜூலை 27, 2025 07:29

அரசு ஊழியர்கள் நிறைய இடத்தில் இதைத்தான் செய்கின்றனர். காலையில் வந்தவுடன் வேலை செய்யும் அலுவலக நேரத்தில், அலுவலகத்தில் சாப்பிடும் பழக்கம். இங்கு அவர் உப்புமா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அதென்ன உயிர்கள் பலியானால்தான் மற்ற ஏற்பாடுகள் எப்படி என்று பார்ப்பார்களா அரசு அலுவலர்கள். முன் கூட்டியே அவங்கவங்க வேலைய சரியா செஞ்சா பெற்றோர்களுக்கு இவ்வாறு ஏற்பட்ட ஒரு இழப்பை தவிர்த்து இருக்கலாமே. ஒருத்தர் செய்யற தவறு மத்தவங்கள்தான் பலி வாங்குது.


முக்கிய வீடியோ