தூய்மையான அரசியல் பேசுபவர் ஆட்சியில் தான் மிகப்பெரும் ஊழல்! கெஜ்ரிவால் மீது ராகுல் தாக்கு
புதுடில்லி:“தூய்மையான அரசியல் பற்றி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகிறார். ஆனால், அவர் ஆட்சியில் தான் மதுபானக் கொள்கையில் மிகப் பெரிய ஊழல் நடந்தது,”என, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேசினார்.பட்பர்கஞ்ச் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அனில் சவுத்ரியை ஆதரித்து, நேற்று நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் ராகுல் பேசியதாவது:மதுபானக் கொள்கை ஊழலில் சிற்பியே முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாதான். பட்பர்கஞ்ச் தொகுதி எம்.எல்.ஏ.,வாக கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற சிசோடியா இந்த முறை தன் தொகுதியை மாற்றிக் கொண்டு விட்டார். புதிய அரசியலை ஏற்படுத்துவேன் என்ற வாக்குறுதியுடன் தன் அரசியல் பயணைத்தை அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கினார். ஆனால், அரசு பங்களாவை அரண்மனை போல மாற்றி ஆடம்பர வாழ்க்கை நடத்தினார். கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் டில்லியில் வன்முறை நடந்தபோது கெஜ்ரிவாலை காணவில்லை. சுதந்திரத்தின் பலன் நமது அரசியலமைப்பு. ஆனால், மோடி வந்து ராமர் கோவில் திறக்கப்பட்ட பிறகே நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தது என பா.ஜ., தலைவர்கள் பேசுகின்றனர்.அதேநேரத்தில் ராமர் கோவில் திறப்பு விழாவில், ஒரு ஏழையைக் கூட அனுமதிக்கவில்லை. பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஜனாதிபதியையும் அழைக்கவில்லை.நாட்டில் தற்போது சித்தாந்த போர் நடக்கிறது. வெறுப்பை பரப்பும் பா.ஜ., - -ஆர்.எஸ்.எஸ்., ஒருபக்கம் இருக்கின்றனர். எதிர் அணியில் காங்கிரஸ் கட்சி தன் சித்தாந்தத்துடன் நிற்கிறது.வெறுப்பை எதிர்க்க அன்பைப் பரப்பிக் கொண்டிருக்கிறோம். வெறுப்பும் பயமும் நிறைந்த நாட்டில் வாழ விரும்பவில்லை. ஆர்.எஸ்.எஸ்., மற்றும் -பா.ஜ., சகோதரர்கள், பல்வேறு ஜாதி, மதங்களைச் சேர்ந்தவர்களுக்குள் சண்டையை தூண்டி விடுகின்றனர். அம்பேத்கரின் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கும் போராட்டம் தொடர்ந்து நடக்கிறது.அம்பானி திருமணத்தில் அதீத ஆர்வம் காட்டும் ஊடகங்கள், மக்கள் பிரச்னைகள் குறித்து பேசுவதே இல்லை. இளைஞர்களுக்கு வேலை இல்லை. நாட்டின் தலைநகரான டில்லியில் சுத்தமான காற்று இல்லை. ஆனால், ஊடகங்கள் மோடியின் முகம், அம்பானி வீட்டு திருமணம் மற்றும் அதானியின் விமான நிலையங்களைக் காட்டிக் கொண்டிருக்கின்றன. கோடீஸ்வரர்களால் மட்டுமே இந்தியா இயங்க வேண்டும் என பா.ஜ., விரும்புகிறது.நாட்டின் வளங்களை ஒரு கோடீஸ்வரனிடம் ஒப்படைத்து விட்டு, சாமானிய மக்களிடம் மதம் மற்றும் ஜாதி அடிப்படையில் சண்டையை தூண்டி விட்டு பா.ஜ., வேடிக்கை பார்க்கிறது.சாமானியர்கள் பையில் இருக்கும் பணத்தைப் பிடுங்கி கோடீஸ்வரர்களிடம் கொடுப்பதே பா.ஜ.,வின் நோக்கம்.கவுதம் அதானி, பிரதமர் மோடியின் நண்பர். அதானி நிறுவனத்தில் இருக்கும் கோடிக்கணக்கான ரூபாயின் கட்டுப்பாடு மோடியின் கையில் தான் உள்ளது.நாட்டின் 500 பெரிய நிறுவனங்களின் உரிமையாளர்களில் தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் யாரும் இல்லை. அதேபோல, அரசின் முக்கியமான துறைகளில் தலித்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரின் பிரதிநிதித்துவம் குறைவாகவே இருக்கிறது.மக்கள் தொகையை ஜாதி வாரியாக கணக்கெடுக்க கூறினால், பிரதமர் மோடி மவுனமாகவே இருக்கிறார்.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, புதுடில்லி தொகுதி காங்., வேட்பாளர் சந்தீப் தீட்சித்தை ஆதரித்து ராகுல் நேற்று காலை பிரசாரம் செய்தார். அப்போது, புதுடில்லி முனிசிபல் கவுன்சில் ஊழியர்களுடன் ராகுல் உரையாடினார். முன்னதாக, மகரிஷி வால்மீகி கோவிலில் ராகுல் பிரார்த்தனை செய்தார். சுவாமி தரிசனத்துக்கு பின், நிருபர்களிடம் ராகுல் கூறியதாவது:கோவில் அருகிலுள்ள காலனியில் புதுடில்லி முனிசிபல் கவுன்சில் ஊழியர்களைச் சந்தித்தேன். மத்திய பா.ஜ., அரசு மற்றும் டில்லியில் ஆம் ஆத்மி அரசின் தனியார்மயமாக்கல் மற்றும் ஒப்பந்த வேலை கொள்கைகளால் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை இல்லாமல் தவிப்பதாக கூறினர். அதேபோல, சம்பளமும் உரிய நாளில் கிடைப்பதில்லை என்றனர். இந்தப் பிரச்னையை தொடர்ந்து பேசுகிறோம். தனியார்மயமாக்கல் மற்றும் ஒப்பந்த முறை பணி ஆகியவை ஏழைகளின் உரிமைகளைப் பறிக்கும் ஆயுதங்கள். லோக்சபாவில் இந்த விவகாரத்தை எழுப்புவோம்.இவ்வாறு அவர் கூறினார்.வால்மீகி காலனி, மந்திர் மார்க் பகுதியில் பொது மக்கள் ராகுலுக்கு தலைப்பாகை அணிவித்தனர். கோல் மார்க்கெட்டிலும் வீதி வீதியாக பிரசாரம் செய்தார்.