நாட்டின் முதல் மின்சார ஏர் டாக்சி
புதுடில்லி:டில்லி வாகன கண்காட்சியில், இந்தியாவின் முதல் மின்சார ஏர் டாக்சி காட்சிப்படுத்தப்பட்டது. 'சர்லா ஏவியேஷன்' என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம், 'ஷுன்யா' என்ற ஏர் டாக்சியை காட்சிப்படுத்தியது.இந்த விமானம், ஆங்கில படமான 'அவதார்' படத்தில் காணப்படுவது போல் உள்ளது. போக்குவரத்து நெரிசல் உள்ள நகரங்களில், வாடகை விமானமாகவும், இலவச விமான ஆம்புலன்ஸ் சேவைக்கும் பயன்படும் என்று, இந்த நிறுவனம் கூறுகிறது. இந்த விமானத்தில், பைலட் உட்பட 7 பேர் வரை பயணிக்கலாம். ஒருமுறை சார்ஜ் செய்தால், 160 கி.மீ., வரை பயணம் செய்ய முடியும். முழு சார்ஜ் செய்ய, 25 நிமிடங்கள் தேவைப்படுகிறது. இது, 1,800 அடி உயரத்திலும், 680 கிலோ எடையை ஏந்தியும் பறக்கும் திறன் உடையது. பேட்டரி திறன் குறித்து எந்த தகவலும் இல்லை.இந்த விமானம், நடப்பாண்டு இறுதியில் பெங்களூரில் அறிமுகமாக உள்ளது. 2028ற்குள் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.