ஒளியாய் இருந்து வழிகாட்டியவர்: சோனியா புகழாரம்
புதுடில்லி: மன்மோகன் சிங் மறைவு குறித்து காங்., பார்லிமென்ட் குழு தலைவர் சோனியா வெளியிட்ட இரங்கல் செய்தி:நாட்டின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் அளவிட முடியாத பங்களிப்பைக் கொடுத்தவர் மன்மோகன் சிங். அவரைப் போன்ற தலைவரைப் பெற்றதற்கு கட்சியில் நாங்களும், மக்களும் பெருமை அடைகிறோம். நேர்மை, இரக்கம் ஆகியவற்றை ஒருங்கே கொண்டு, நம் நாட்டிற்கு முழு மனதுடன் சேவையாற்றிய தலைவரை நாம் இழந்துள்ளோம். காங்கிரசுக்கு ஒளியாய் இருந்து வழிகாட்டியவர். அவரின் இரக்கம் மற்றும் தொலைநோக்கு பார்வையால், நாட்டில் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை முன்னேற்றம் அடைந்துள்ளது. ஒரு நண்பராகவும், வழிகாட்டியாகவும், தத்துவஞானியாகவும் இருந்த அவரின் மரணம் எனக்கு தனிப்பட்ட இழப்பாகும். இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே, காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது. இதில், மன்மோகன் சிங் மறைவு குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.