மீண்டும் செயல்பட துவங்கியது வாகமண் கண்ணாடி பாலம் இயற்கை அழகை ரசித்த பயணிகள்
மூணாறு:கேரள மாநிலம் வாகமண்ணில் பாதுகாப்பு கருதி மூடப்பட்ட கண்ணாடி பாலம் மீண்டும் செயல்பட துவங்கியது.இடுக்கி மாவட்டம் முக்கிய சுற்றுலா தலமாக வாகமண், கோலாகலமேட்டில் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கழகம், பெரம்பாவூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் சார்பில் ரூ.3 கோடி செலவில் கண்ணாடி நடை பாலம் அமைக்கப்பட்டது. கடல் மட்டத்தில் இருந்து 3600 அடி உயரத்தில் 120 அடி நீளத்தில் அமைக்கப்பட்ட இதில் ஒரே நேரத்தில் 15 பேர் சென்று தொலைதுார பகுதிகளின் இயற்கை அழகை ரசிக்கலாம். கடந்தாண்டு செப்.6ல் பாலம் பயன்பாட்டுக்கு வந்தது.தென்மேற்கு பருவமழையை கருத்தில் கொண்டு பாதுகாப்பு கருதி சுற்றுலா துறை இயக்குனர் உத்தரவுப்படி பாலம் ஜூன் 1 ல் மூடப்பட்டது.தற்போது மழை குறைந்து காலநிலை சாதகமானதால் பாலத்தின் உறுதி, பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து கோழிக்கோடு என்.ஐ.டி.யைச் சேர்ந்த சிவில் இன்ஜினியரிங் துறையினர் கடந்த வாரம் ஆய்வு நடத்தி அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில் கூறப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட பரிந்துரைகளை கண்டிப்பாக கடைபிடிப்பதை உறுதி செய்த பின்னர் பாலத்தை திறக்க அரசு உத்தரவிட்டது.அதன்படி கடந்த நான்கு மாதங்களாக மூடப்பட்ட கண்ணாடி பாலம் நேற்று முதல் மீண்டும் செயல்பட துவங்கியது. நேற்று 600க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பாலத்தில் ஏறி ரசித்தனர். காலை 9:00 முதல் மாலை 5:30 மணி வரை செல்லலாம். கட்டணம் நபர் ஒன்றுக்கு ரூ.250.